< Back
மாநில செய்திகள்
தொழில் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தொழில் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி

தினத்தந்தி
|
3 May 2023 6:45 PM GMT

புற்றுநோய்க்கான மருந்துக்கு மூலப்பொருள் மருந்து வாங்கி தந்தால் கமிஷன் தருவதாக கூறி ஓசூர் தொழில் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஏற்றுமதி ஆலோசகர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலை மீனாட்சி நகரை சேர்ந்தவர் இளங்கோ (வயது 73). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது ஏற்றுமதி ஆலோசகராக இருந்து வருகிறார்.

வணிக நோக்கத்திற்காக அவர் தனது விவரங்களை இந்திய ஏற்றுமதி அமைப்பு கூட்டமைப்பில் (எப்.ஐ.இ.ஓ.) பதிவு செய்திருந்தார். கடந்த 9.1.2023 அன்று டாக்டர் மெலிசா கிப்சன் என்பவர் அவரிடம் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தான் அமெரிக்க ஆராய்ச்சி டாக்டர் என்றும், புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது. அதனை வாங்கி தந்தால் அதற்கு உரிய கமிஷன் தொகை கிடைக்கும் என்றும் அந்த டாக்டர் கூறினார்.

ரூ.1.94 கோடி மோசடி

மேலும் அந்த மூலப்பொருட்களை எப்படி வாங்குவது என்றும், அதற்கான இணையதள முகவரியையும் அந்த டாக்டர் இளங்கோவுக்கு அனுப்பினார். அந்த இணையதளம் மூலம் இளங்கோ, டாக்டர் கூறிய மூலப்பொருளை வாங்கி அனுப்பினார். அதன்மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக இளங்கோவுக்கு அந்த டாக்டர் முதல் முறை அனுப்பி வைத்தார்.

அதன்பிறகு புற்றுநோய்க்கான மூலப்பொருள் வாங்க, டாக்டர் கூறிய இணையதளத்துக்கு ஆன்லைன் மூலம் 6 வங்கி கணக்குகளில் இருந்து மொத்தம் ரூ.1 கோடியே 94 லட்சத்து 95 ஆயிரத்து 820-ஐ அனுப்பினார். அதன் பிறகு மூலப்பொருட்கள் எதுவும் இளங்கோவிற்கு கிடைக்கவில்லை.

போலீசில் புகார்

மேலும் மெலிசா கிப்சனும் இளங்கோவுடன் பேசவில்லை. அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளங்கோ இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில், போலி இணையதளத்தை இளங்கோவுக்கு அனுப்பி டாக்டரே பணம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

ஓசூர் தொழில் அதிபரிடம் நூதன முறையில் ரூ.1 கோடியே 94 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்