< Back
மாநில செய்திகள்
அஞ்சலக சேமிப்பு கணக்கில் ரூ.80 ஆயிரம் மோசடி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

அஞ்சலக சேமிப்பு கணக்கில் ரூ.80 ஆயிரம் மோசடி

தினத்தந்தி
|
26 April 2023 6:45 PM GMT

அஞ்சலக சேமிப்பு கணக்கில் ரூ.80 ஆயிரம் மோசடி


ராமநாதபுரம் அருகே உள்ள காமன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கதிர்வேலு என்பவரின் மனைவி சந்திரா (வயது 55). ஊராட்சி துணை தலைவராக உள்ளார். இவர் நேற்று ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் எங்கள் ஊரில் உள்ள கிளை தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கி தற்காலிக பெண் பணியளாரிடம் பணம் கொடுத்து வந்தேன். மாதந்தோறும் நான் எனது கணக்கில் செலுத்துவதற்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை கொடுத்து வந்தேன். எனது பணத்தை பெற்றுக்கொள்ளும் அந்த பெண் பணத்தை எனது கணக்கில் வரவு வைத்துவிடுவதாக கூறி வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எனது பணத்தை சென்று கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து கேட்டபோது தன்னை பணியில் இருந்து நீக்கி விட்டதாகவும், உங்கள் பணத்தினை அலுவலகத்தில் செலுத்தி உள்ளேன் என்று கூறி எனது பெயரில் பல கணக்கு புத்தகங்களை வழங்கினார். அதில் மாதந்தோறும் ரூ.100 மட்டும் பணம் செலுத்தி வந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது நீங்கள் கொடுத்த தொகை இவ்வளவுதான் என்று கூறி மிரட்டி வருகிறார். எனவே, என்னிடம் ரூ.80 ஆயிரம் வரை பெற்று அஞ்சலக கணக்கு புத்தகத்தில் பதிவு செய்யாமல் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்