தர்மபுரி
பெண்ணிடம் ரூ.63 ஆயிரம் மோசடி
|விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.63 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.63 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விமான நிலையத்தில் வேலை
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மனோ. இவருடைய மனைவி பவித்ரா (வயது 23). பி.எஸ்சி. கணிதம் படித்துள்ளார். இவர் விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு என்று வெளியான ஒரு தகவலை பார்த்துள்ளார். இதுதொடர்பாக அதில் இடம்பெற்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அந்த நபர் வாட்ஸ்அப் மூலம் விவரங்களை அனுப்பி வைக்குமாறு கூறினார். அதன்படி பவித்ரா தனது படிப்பு தொடர்பான விவரங்களை அனுப்பி உள்ளார். இதைத்தொடர்ந்து பவித்ராவின் செல்போன் எண்ணுக்கு அறிமுகம் இல்லாத வேறு ஒரு நபர் தொடர்பு கொண்டு பேசினார்.
ரூ.63 ஆயிரம் மோசடி
அப்போது விமான நிலையத்தில் இளநிலை உதவியாளர் பணிக்கு நீங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அந்த நபர் கூறி உள்ளார். அந்த பணியில் சேர பதிவு கட்டணம், காப்பீடு உள்ளிட்டவற்றிற்கு ரூ.63 ஆயிரத்து 400 செலுத்த வேண்டும் என்று அந்த நபர் கூறியுள்ளார். இதை நம்பி பவித்ரா அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி உள்ளார். ஆனால் அதன் பிறகு செல்போனில் பேசிய நபர் மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை.
இதையடுத்து பவித்ரா அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பவித்ரா இதுகுறித்து தர்மபுரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப மோசடி சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் பணம் மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.