< Back
மாநில செய்திகள்
ஆன்லைனில் கட்டிட மேஸ்திரியிடம் ரூ.7.86 லட்சம் மோசடி
நாமக்கல்
மாநில செய்திகள்

ஆன்லைனில் கட்டிட மேஸ்திரியிடம் ரூ.7.86 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
8 Dec 2022 7:04 PM GMT

வீடுகட்ட கடன் தருவதாக கூறி ஆன்லைனில் கட்டிட மேஸ்திரியிடம் ரூ.7 லட்சத்து 86 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிட மேஸ்திரி

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் விஜயகுமார் (வயது 36). கட்டிட மேஸ்திரி. இவர் புதிதாக வீடு கட்டுவதற்கு கடன் வாங்க முயற்சிகள் மேற்கொண்டு வந்தார்.

இதற்கிடையே இவரது செல்போனுக்கு வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் ரூ.18 லட்சம் வீடு கட்ட கடன் தருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் நில பத்திரத்தின் நகல் ஆகியவற்றை ஆன்லைனில் அனுப்புமாறு தெரிவித்தனர். இதை அனுப்பி பிறகு லோனுக்கு முன்பணமாக ரூ.7 லட்சத்து 86 ஆயிரம் கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ரூ.7.86 லட்சம் மோசடி

இதை உண்மை என நம்பிய விஜயகுமார் பல்வேறு கட்டங்களாக அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு ரூ.7 லட்சத்து 86 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். ஆனால் 3 மாதங்கள் ஆன நிலையிலும் கடன் தொகை கிடைக்கவில்லை. இதற்கிடையே மோசடி நபர்கள் தொடர்பு கொண்ட செல்போன் அனைத்தும் 'சுவிட்ச்-ஆப்' செய்யப்பட்டு உள்ளது.

இதனால் ரூ.7 லட்சத்து 86 ஆயிரம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த விஜயகுமார், நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்