< Back
மாநில செய்திகள்
பலகோடி ரூபாய் மோசடி செய்ததாக நிதி நிறுவன அதிபர் கைது
சிவகங்கை
மாநில செய்திகள்

பலகோடி ரூபாய் மோசடி செய்ததாக நிதி நிறுவன அதிபர் கைது

தினத்தந்தி
|
4 Nov 2022 6:45 PM GMT

பலகோடி ரூபாய் மோசடி செய்ததாக நிதி நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டார்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள கொரட்டி பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரி (வயது 35). இவர் காரைக்குடி அண்ணா மார்க்கெட் அருகே நகை அடகு கடை, நிதி நிறுவனம் நடத்தி வந்த நைனா முகமது (49) என்பவரிடம் 46 பவுன் நகைகளை அடகு வைத்து அதற்குரிய பணத்தை பெற்று சென்றார். குறிப்பிட்ட காலத்தில் அதனை திருப்ப சென்றபோது வட்டியுடன் பணத்தை கட்டி செல்லுங்கள், 10 நாட்கள் கழித்து நகைகளை வாங்கி கொள்ளலாம் என்று நைனா முகமது கூறியுள்ளார். சோமசுந்தரி 10 நாட்கள் கழித்து சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர், காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் நைனா முகமது, அவரது மனைவி சிந்துஸ் பானு (43), உதவியாளர் முத்துப்பட்டணம் செந்தில்குமார் (40) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நைனா முகமதுவை கைது செய்தனர். இதற்கிடையே அவரிடம் நகைகள் அடகு வைத்தோர், நிலங்களை அடமானம் வைத்தோர் பலர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க குவிந்தனர். நிலத்தை அடமானம் வைத்து பணம் பெற வந்த முதியவர் ஒருவரிடம் 1½ ஏக்கர் நிலத்தை மோசடி செய்து நைனா முகமது தன் பெயருக்கு மாற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் காளையார் கோவில், இளையான்குடி, பரமக்குடி, முதுகுளத்தூர், அபிராமம் ஆகிய பகுதிகளிலும் மோசடி செய்துவிட்டு காரைக்குடியில் பதுங்கியதாகவும், இவர் பல்வேறு விதங்களில் மோசடி செய்ததாகவும், இந்த வழக்குகளை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.

Related Tags :
மேலும் செய்திகள்