கிருஷ்ணகிரி
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15½ லட்சம் மோசடி
|பரிசுகள் விழுந்துள்ளதாக கூறி ஓசூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரிசுகள் விழுந்துள்ளதாக கூறி ஓசூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அலசநத்தம் சாலையை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 27.2.2022 அன்று இவருக்கு தபால் மூலம் ஒரு பார்சல் வந்தது. அதில் நாப்டால் ஸ்க்ராட்ச் அண்ட் வின் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த தபாலை பிரித்து பார்த்த பிரேம்குமார் அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.
அதில் பேசிய நபர் தான் நாப்டால் நிறுவன அதிகாரி என்றும், தங்களுக்கு பரிசுகள் விழுந்துள்ளது. அதற்காக ஜி.எஸ்.டி. கட்டணம் மற்றும் நடைமுறை செலவுகளுக்கான கட்டணங்களை செலுத்துமாறு கூறினார். அதை நம்பிய பிரேம்குமார், 4 வெவ்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குகளில் ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் தொகையை செலுத்தி உள்ளார்.
போலீசார் விசாரணை
ஆனால் குறிப்பிட்டவாறு பிரேம்குமாருக்கு எந்த பரிசும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நபர், தான் ஏற்கனவே தொடர்பு கொண்டு பேசிய நபருக்கு போன் செய்தார். அப்போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து பிரேம்குமார் கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.