< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் வேளாண்மைத்துறையில்  அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி  பாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் வேளாண்மைத்துறையில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி பாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்

தினத்தந்தி
|
21 May 2022 10:24 PM IST

விழுப்புரம் வேளாண்மைத்துறையில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள மண்டகப்பட்டு, கணக்கன்குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஆறுமுகம், அன்பு, அருண்குமார் உள்ளிட்ட 10 பேர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வேளாண் விதை விற்பனை நிலையம் வைத்து நடத்தி வரும் ஒருவர், எங்களுக்கு அறிமுகமானார். அவர், தனக்கு வேளாண்மை துறை அதிகாரிகள் பலரை தெரியும் என்றும், அவர்கள் மூலமாக எங்களுக்கு வேளாண்மை துறையில் அரசு வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் என்றும் கூறினார்.

ரூ.10 லட்சம் மோசடி

இதை நம்பிய நாங்கள் ஒவ்வொருவரும், அவரிடம் தலா ரூ.1 லட்சம் கொடுத்தோம். ரூ.10 லட்சத்தை பெற்றுக்கொண்ட அவர், எங்களுக்கு அரசு வேலை வாங்கித்தராமல் ஏமாற்றி வந்தார்.

இதனால் நாங்கள் பண்ருட்டியில் உள்ள வேளாண் விதை விற்பனை நிலையத்திற்கு நேரில் சென்று அவரிடம் கேட்டதற்கு, சில நாட்களில் பணத்தை திருப்பித்தருவதாக கூறிவிட்டு திடீரென வேளாண் விதை விற்பனை நிலையத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டார்.

மேலும் இதேபோல் அவர், பல மாவட்டங்களிலும் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். எனவே அவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு எங்களுடைய பணத்தையும் மீட்டுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மேலும் செய்திகள்