கிருஷ்ணகிரி
பகுதி நேர வேலை எனக்கூறிதனியார் நிறுவன ஊழியா்கள் 2 பேரிடம் ரூ.19.82 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை
|கிருஷ்ணகிரி
பகுதி நேர வேலை எனக்கூறி தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேரிடம் ரூ.19.82 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன ஊழியர்
ஓசூர் அம்மன் நகரை சேர்ந்தவர் கலையரசன் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 26.2.2023 அன்று இவரது செல்போனில் வாட்ஸ் அப்பிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை செய்தால் அதிக சம்பளம் கிடைக்கும் என கூறப்பட்டு இருந்தது. இதை நம்பிய கலையரசன் அதில் கூறிய வங்கி கணக்குகளுக்கு நடைமுறை செலவுகளுக்கான தொகையாக ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பினார்.
ஆனால் அதன் பிறகு கலையரசன் எண்ணிற்கு எந்த தகவலும் வரவில்லை. இதனால் அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கலையரசன் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
மற்றொரு புகார்
ஓசூர் பத்தலப்பள்ளியை சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன் (39). பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 5-ந் தேதி இவரது செல்போனில் வாட்ஸ் அப்பிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேரமாக வேலை செய்தால் அதிக சம்பளம் கிடைக்கும் என கூறப்பட்டு இருந்தது.
அதை நம்பி நவநீதகிருஷ்ணன், அதில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்குகளுக்கு ரூ.6 லட்சத்து 32 ஆயிரத்து 400 நடைமுறை செலவுகளுக்காக அனுப்பினார். இதன் பிறகு அவரது எண்ணிற்கு எந்த தகவலும் வரவில்லை.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நவநீத கிருஷ்ணன் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இந்த மோசடி புகார்கள் குறித்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.