செங்கல்பட்டு
கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் எதிரே துண்டு துண்டாக மனித எலும்புக்கூடு; கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
|கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் எதிரே துண்டு, துண்டாக மனித எலும்புக்கூடு கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எலும்புக்கூடு
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் எதிரே உள்ள புதரில் எலும்புக்கூடு கிடப்பதாக அந்த பகுதியில் மாடு மேய்க்கும் முதியவர் ஒருவர் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு ஒரு மனித எலும்பு கூடு துண்டு, துண்டாக கிடந்தது. மண்டையோடு தனியாகவும், மார்பு பகுதியில் பனியன் அணிந்தபடி கை கால்கள் மற்றும் உடல் தனியாகவும் கிடந்தது.
இதையடுத்து அந்த எலும்புக்கூட்டை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையா?
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை? எதற்காக அவர் இங்கு வந்தார்? யாராவது கொலை செய்து விட்டு உடலை புதரில் வீசிவிட்டு சென்றார்களா? அல்லது ரெயிலில் அடிபட்டு உடல் புதரில் விழுந்ததா? மேலும் அந்த எலும்புக்கூடு ஆண் எலும்பு கூடா அல்லது பெண்ணின் எலும்பு கூடா என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் எதிரே மனித எலும்புக்கூடு கைப்பற்றப்பட்ட சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.