< Back
மாநில செய்திகள்
புத்தக கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய மராட்டியத்தை சேர்ந்த 4 பேர் கைது
தேனி
மாநில செய்திகள்

புத்தக கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய மராட்டியத்தை சேர்ந்த 4 பேர் கைது

தினத்தந்தி
|
7 Jun 2022 5:16 PM GMT

கடன் செயலியில் சமர்ப்பித்த புகைப்படத்தை மார்பிங் செய்து புத்தக கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய மராட்டியத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான நபர்கள் நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

கடன் வழங்கும் செயலி

மதுரை சிக்கந்தர் சாவடி 8-வது தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 35). இவர் தேனியில் புத்தக கடை வைத்துள்ளார். இவர் கடந்த ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பணத்தேவை காரணமாக, உடனடி கடன் பெறும் வசதி கொண்ட ஒரு செல்போன் செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்தார். அந்த செயலியில் தனது ஆதார் அட்டை, பான் கார்டு விவரங்களை சமர்ப்பித்ததுடன், தனது செல்பி புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்தார்.

அதன்பேரில் அவருக்கு ரூ.6 ஆயிரம் கடன் தொகை கிடைத்தது. சில நாட்களில் அந்த பணத்தை அவர் அதே செயலி மூலம் செலுத்தினார். ஆனால், அந்த செயலியை நடத்தி வரும் நிறுவனத்தை சேர்ந்த நபர்கள் அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, இன்னும் கடன் தொகையை செலுத்தவில்லை என்று கூறினர். அப்போது அவர் ஏற்கனவே தனது கடனை செலுத்திவிட்டதாக கூறினார்.

மார்பிங் புகைப்படம்

இதனால் அவருடைய செல்போன் எண்ணுக்கு அவருடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பி வைத்த மர்ம நபர்கள், அதை சமூக வலைத்தளங்களிலும், அவருடைய செல்போனில் சேமித்து வைத்துள்ள அனைத்து செல்போன் எண்களுக்கும் அனுப்பி விடுவோம் என்று மிரட்டினர். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் மேலும் ரூ.8,400 செலுத்தினார்.

ஆனால் அந்த நபர்கள் மீண்டும் பணம் கேட்டு மிரட்டினர். இதையடுத்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ராஜேஷ்குமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட செயலி குறித்தும், மிரட்டிய நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தினர்.

சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் மோசடி நபர்களின் 7 வங்கிக் கணக்கு விவரங்கள் கிடைத்தன. அதில், 6 வங்கிக் கணக்கு விவரங்கள் சம்பந்தப்பட்ட செயலி நிறுவனத்தின் பெயரிலும், ஒரு வங்கிக் கணக்கு மராட்டிய மாநிலம் புனே பகுதியை சேர்ந்த சாகர்அங்கூஸ் சோர்கி என்பவருடைய பெயரிலும் இருந்தது. இதையடுத்து சைபர் கிரைம் தனிப்படை போலீசார் மராட்டிய மாநிலத்துக்கு சென்று சாகர் அங்கூஸ் சோர்கியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் மூட்டைத் தூக்கும் கூலி வேலை செய்து வருவதும், அவருக்கு கடன் வாங்கித் தருவதாக கூறி ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை புனேயை சேர்ந்த பிரபுல் (46) என்பவர் வாங்கிச் சென்றதாகவும் தெரியவந்தது.

4 பேர் கைது

பின்னர் பிரபுல் மற்றும் அவருடைய கூட்டாளிகளான அதே பகுதியை சேர்ந்த மகரந்த் (31), ராஜேந்தர் (42), தயானேஷ்வர் (42) ஆகிய 4 பேரையும் சைபர் கிரைம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 4 பேருடன் மேலும் சிலரும் சேர்ந்து இதுபோன்ற மோசடியை சில ஆண்டுகளாக செய்து வருவதாக தெரியவந்தது.

பின்னர் பிரபுல், மகரந்த், ராஜேந்தர், தயானேஷ்வர் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து நேற்று தேனிக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து 4 பேரையும் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

பல கோடி மோசடி

இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மோசடி நபர்கள் பயன்படுத்திய ஒரு வங்கிக் கணக்கு மூலமாக மட்டும் கடந்த 3 மாத கால கட்டத்தில் ரூ.11 கோடி பெறப்பட்டுள்ளது. அந்த தொகை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களையும் இந்த கும்பல் மிரட்டி பல கோடி ரூபாய் பறித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

பறிமுதல்

இதற்கிடையே கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்தும், ரூ.2 லட்சம், 10 செல்போன்கள், 2 கம்ப்யூட்டர், 2 கலர் பிரிண்டர், 17 காசோலை புத்தகங்கள், 8 ஏ.டி.எம். கார்டுகள், 10 சிம் கார்டு கவர்கள் மற்றும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த மோசடி கும்பலை இயக்கிய நபர் மலேசியாவில் இருப்பதாக தெரிய வருகிறது. மலேசியாவில் பதுங்கி இருக்கும் நபர், அங்கே இருந்தபடி மோசடியை அரங்கேற்றி உள்ளார். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்