சென்னை ஈசிஆர் சாலையில் மினி லாரி மீது கார் மோதி கோர விபத்து: 4 பேர் பலி
|ஈசிஆர் சாலையில் மினி லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னை,
சென்னை ஈசிஆர் சாலையில் இன்று காலை பயங்கர விபத்து ஏற்பட்டது. புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி ஈசிஆர் சாலையில் அதிவேகமாக வந்த கார் கோவளம் அருகே சாலை தடுப்புபலகை (பேரிகேட்) மீது மோதியது.
பின்னர், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியின் பின்பக்கத்தில் அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் நண்பர்கள் என்பது தெரியவந்தது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முகமது ஆசிக் கடந்த 3ம் தேதி சொந்த ஊரான சென்னை வந்துள்ளார். அவர் தனது நண்பர்கள் அடில் முகமது, அஸ்லப் முகமது, சுல்தான் ஆகிய 3 பேருடன் காரில் சென்னையில் இருந்து புதுச்சேரி சென்றுள்ளார். புதுச்சேரியில் இருந்து இன்று காலை 4 பேரும் காரில் சென்னை திரும்பியுள்ளனர். அப்போது இந்த விபத்து ஏற்பட்டு 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.