ரேஷன் கடைகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி தகவல்
|ரேஷன் கடைகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை ஆலை முகவர்களுடன், பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டும் அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் இன்று நடைபெற்றது.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:-
மத்திய அரசு தெரிவித்துள்ளதை அடுத்து முதல்-அமைச்சர் ஆணைப்படி பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசி வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செறிவூட்டப்பட்ட அரசுடன் கலந்து வழங்கப்படும். இரும்பு சத்து, போலிக் அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்து அடங்கியது இந்த செறிவூட்டப்பட்ட அரிசி என்று கூறிய அவர் 100 கிலோ அரசியில் 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்படும்.
கடந்த காலத்தை விட 3 முதல் 4 மடங்கு அதிகமாக அரிசி கடத்தலை தடுத்துள்ளோம். தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதாகவும், இனி வரும் காலங்களில் முற்றிலும் ரேஷன் அரிசி கடத்தல் தடுக்கப்படும்.
கடந்த 18 மாதமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை முழுவதுமாக அரைத்து பெரும் சாதனை படைத்துள்ளனர். செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பதிவு செய்து 755 அரவை ஆலைகள் உள்ளது. நெல்லை சேமித்து வைக்க குடோன்கள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.