சேலம்
கோட்டை மாரியம்மன் கோவிலில் யாகசாலைகள் அமைக்கும் பணி தீவிரம்
|கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் யாகசாலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வெள்ளிக்கவசத்தில் அம்மன்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிவடைந்துள்ளது. கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது. நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 23 யாகசாலைகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. தற்போது அவற்றுக்கு வர்ணம் பூசும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலின் பின்புற நுழைவுவாயிலில் 20 அடி உயரத்தில் மகா மாரியம்மன் உருவம் தத்ரூபமாக வைக்ககும் பணி நடந்து வருகிறது.
அலங்கார மின் விளக்குகள்
மூலவர் அம்மன் சன்னதியை சுற்றி பித்தளையால் ஆன தடுப்பு கிரீல் அமைக்கப்பட்டுள்ளது. கல் தூண்களில் சிம்மயாளி உள்ளிட்ட சிலைகளை செதுக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கோட்டை மாரியம்மன் கோவிலின் ராஜகோபுரத்தில் அலங்கார மின் விளக்குகளால் அலங்கரிக்கும் பணி தொடங்கி உள்ளது.
இதேபோல் கோவிலை சுற்றிலும் ஆங்காங்கே சாமி படம் அமைக்கப்பட்ட மின்விளக்குகள் வைக்கப்பட்டு வருகின்றன. கும்பாபிஷேக விழா முன்னேற்பாடு பணிகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
பரவசத்துடன் பார்க்கும் வகையில்...
இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் எஸ்.டி.என்.சக்திவேல் கூறும்போது, பொதுமக்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் கொடுத்த பங்களிப்பால் கோவிலில் அலங்கார பணிகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் பரவத்துடன் பார்க்கும் வகையில் கல் தூண்களில் சிற்ப வேலைகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக நடைபெறும் அன்று கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் காலை முதல் மாலை வரை 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.