< Back
மாநில செய்திகள்
பார்முலா-4 கார் பந்தயம் : உதயநிதி ஸ்டாலினுக்கு புகழ் சேர்ப்பதில்தான் தமிழக அரசு ஆர்வம் - மத்திய மந்திரி எல்.முருகன்
மாநில செய்திகள்

பார்முலா-4 கார் பந்தயம் : உதயநிதி ஸ்டாலினுக்கு புகழ் சேர்ப்பதில்தான் தமிழக அரசு ஆர்வம் - மத்திய மந்திரி எல்.முருகன்

தினத்தந்தி
|
3 Dec 2023 5:03 AM IST

பார்முலா-4 கார் பந்தயத்தை இருங்காட்டுக்கோட்டையில் நடத்த வேண்டும் என்று மத்திய மந்திரி எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பார்முலா 4 சாம்பியன்ஷிப் போட்டி வரும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் சென்னையில் நடத்தப்போவதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்திருக்கிறது. ஆனால் இந்த பந்தயத்தை ரேசிங் புரோமோஷன் என்ற தனியார் நிறுவனம் நடத்துவதாக தெரிகிறது. இந்த பணிகளை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகிறார்.

அங்கு நன்றாக இருக்கும் சாலைகளை உடைத்து, புதிய பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இது வாகன ஓட்டிகளுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே கார் பந்தயங்களை நடத்துவதற்கு என ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் பந்தயக் களம் இருக்கிறது. அதை விடுத்து மக்கள் வசிக்கும் பகுதியில் நடத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது.

மேலும் தமிழக நிதி நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறி, பல்வேறு நிதி சார்ந்த பணிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்திவரும் தமிழக அரசு, தனியார் நடத்தும் கார் பந்தயத்திற்கு ரூ.40 கோடியை ஒதுக்க வேண்டிய அவசியம் என்ன?. உதயநிதி ஸ்டாலினுக்கு புகழ் சேர்ப்பதிலும், அவருக்காக விளம்பரம் செய்வதிலும் தான் தமிழக அரசு ஆர்வமாக இருக்கிறது.

சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் தமிழக வீரர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இதை சரிசெய்ய அமைச்சர் உதயநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களை வதைக்கும் கார் பந்தயத்தை இருங்காட்டுக்கோட்டையில் நடத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்