< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில் பேக்கரி முன்புமது விற்றவரை கையும், களவுமாக பிடித்த கலெக்டர்
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில் பேக்கரி முன்புமது விற்றவரை கையும், களவுமாக பிடித்த கலெக்டர்

தினத்தந்தி
|
28 Sept 2023 3:29 AM IST

ஈரோட்டில் பேக்கரி முன்பு மது விற்றவரை கலெக்டர் கையும், களவுமாக பிடித்தாா்.

ஈரோட்டில் பேக்கரிக்கு முன்பு மது விற்றவரை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கையும், களவுமாக பிடித்தார்.

சட்டவிரோத மது விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஈரோடு பவானி ரோட்டில் நேற்று தனது காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது நெரிக்கல்மேடு பகுதியில் உள்ள ஒரு பேக்கரிக்கு முன்பு சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

இதை பார்த்ததும் காரை நிறுத்த உத்தரவிட்ட கலெக்டர், இறங்கி சென்று அவரிடம் விசாரணை நடத்தினார். உடன் வந்த அதிகாரிகளும் சோதனை நடத்தினர். அப்போது அந்த நபரிடம் 18 மது பாட்டில்கள் இருந்ததும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

கலெக்டர் விசாரணை

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 45) என்பதும், சூளையில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடையில் மது பாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு தாசில்தாருக்கும், வீரப்பன்சத்திரம் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து சூளையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்ற கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அங்கிருந்த மேற்பார்வையாளர், விற்பனையாளரிடம் விசாரணை நடத்தினார். அப்போது ஒரு நபருக்கு எத்தனை மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது? அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் மது விற்பனை முறையாக நடக்கிறதா? போன்ற விவரங்களை கேட்டறிந்தார்.

சீல் வைப்பு

இதற்கிடையே ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார், கிராம நிர்வாக அதிகாரி அப்துல் ரகுமான் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின்பேரில், சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ய அனுமதித்ததற்காக பேக்கரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்