< Back
மாநில செய்திகள்
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் நினைவு சின்னம் அமைக்க இடம் ஒதுக்கப்படும்
திருவாரூர்
மாநில செய்திகள்

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் நினைவு சின்னம் அமைக்க இடம் ஒதுக்கப்படும்

தினத்தந்தி
|
1 July 2023 12:15 AM IST

மன்னார்குடியில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் நினைவு சின்னம் அமைக்க இடம் ஒதுக்கப்படும் என்று நகரசபை தலைவர் மன்னை.சோழராஜன் தெரிவித்தார்.

நகரசபை கூட்டம்

மன்னார்குடி நகரசபை சாதாரண கூட்டம் நேற்று நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் மன்னை. சோழராஜன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் நாராயணன், துணைத்தலைவர் கைலாசம், நகராட்சி மேலாளர் மீராமன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு:-

திருச்செல்வி (அ.ம.மு.க): ஆர்.பி.சிவம் நகரில் உள்ள காந்தி மண்டபத்தை புதுப்பிக்கவேண்டும். பன்றி தொல்லையை கட்டுபடுத்தவேண்டும். பாமணி ஆற்றங்கரையில் கோழி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

பாரதிமோகன் (தி.மு.க.): கோபிரளய குளத்தை கரைகள் கட்டி சீரமைக்க வேண்டும்.

வேகத்தடை அமைக்க வேண்டும்

ஐஸ்வர்யாலட்சுமி (தி.மு.க.): குப்பைகளை அகற்றும் பணியாளர்கள் ஒரே பகுதியில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அடிக்கடி ஆட்கள் மாறுவதால் குப்பைகளை அகற்றுவதில் குழப்பங்கள் ஏற்படுகிறது.

புகழேந்தி (தி.மு.க.): சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டதற்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

ஏ.பி.அசோகன் (தி.மு.க.) :மேலகோபுரவாசல் பகுதியில் பஸ்நிறுத்தம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

சூர்யகலா (அ.தி.மு.க.) :வடுவூர் ரோடு-வடசேரி சாலை சந்திக்கும் இடத்தில் வேகத்தடை அமைக்கவேண்டும்.

சுமதி (தி.மு.க.) :சங்கு தீர்த்த குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

துணைத்தலைவர்: மன்னார்குடியில் 92 குளங்கள் இருந்த நிலையில் தற்போது 30 குளங்கள் மட்டுமே உள்ளது. நிலத்தடி நீர் வளமும் பாதிக்கப்படுகிறது. எனவே குளத்தில் மீன் வளர்ப்பதற்கு அனுமதி அளிக்கக்கூடாது. குளங்களை பாதுகாப்பதற்கு குளங்கள் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம்.

தலைவர்: மன்னார்குடி நகராட்சிக்கு புதிய பஸ் நிலையம், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கும், அதற்கு துணையாக இருக்கும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிற்கும் நகராட்சி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

நினைவு சின்னம் அமைக்க இடம் ஒதுக்கப்படும்

ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் படகு குழாம் அமைக்க முதல் கட்டமாக ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ரூ.2 கோடியே 29 லட்சம் செலவில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. சட்ருட்டி வடிகால் வாய்க்கால் சீரமைக்கும் பணிகள் ரூ.5 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. பூக்கொல்லை ரோட்டில் ரூ.50 லட்சம் செலவில் நகர்ப்புற வீடு இல்லாதவர்களுக்கு தங்கும் இல்லம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் அறிவித்தப்படி மறைந்த சிங்கப்பூர் முன்னாள் பிரதமருக்கு மன்னார்குடியில் நினைவு சின்னம் அமைக்க இடம் ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

மேலும் செய்திகள்