< Back
மாநில செய்திகள்
மாணவர்களை தனது காரில் பள்ளிக்கு அனுப்பிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மாணவர்களை தனது காரில் பள்ளிக்கு அனுப்பிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

தினத்தந்தி
|
30 Aug 2023 12:37 AM IST

பஸ் கிடைக்காமல் 2 மணி நேரமாக காத்திருந்த மாணவர்களை தனது காரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா கல்லூரியில் நேற்று வட்டார அளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அன்னவாசல் ஒன்றியம், அகரப்பட்டியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் போட்டி முடிந்து பள்ளிக்கு செல்வதற்காக இலுப்பூர் மேட்டுச்சாலை பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக 2 மணி நேரமாக மாணவர்களுடன், ஆசிரியர்கள் காத்திருந்தனர்.

அப்போது அந்த வழியாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. காரில் வந்தார். பள்ளி மாணவர்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்பதை பார்த்தவுடன் அவர் தனது காரை நிறுத்தினார். பின்னர் காரில் இருந்து இறங்கி மாணவர்களிடம் அவர் பேசினார். அப்போது பஸ் இல்லாமல் 2 மணி நேரம் காத்திருப்பதாக மாணவர்கள் அவரிடம் தெரிவித்தனர். பின்னர் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய விஜயபாஸ்கர், அவரது கார் மற்றும் மற்றொரு கார் என 2 கார்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிக்கொண்டு பள்ளியில் இறக்கி விட்டு வருமாறு டிரைவர்களிடம் கூறினார்.

இதனையடுத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் 2 கார்களில் டிரைவர்கள் ஏற்றிக்கொண்டு பள்ளியில் கொண்டு விட்டு வந்தனர். அதுவரை விஜயபாஸ்கர் அந்த பஸ் நிறுத்தத்திலேயே காத்திருந்தார். இதைத்தொடர்ந்து கார் மீண்டும் வந்தவுடன் காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மாணவர்களை அவர் தனது காரில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் இறக்கி விடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மேலும் செய்திகள்