தஞ்சாவூர்
முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா மாரடைப்பால் மரணம்
|முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா மாரடைப்பால் மரணம்
தஞ்சையில், பேரன் திருமணத்துக்கு புறப்பட்ட போது முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா மாரடைப்பால் உயிரிழந்தார்.
எஸ்.என்.எம். உபயதுல்லா
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா(வயது82).
தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே கல்லுகுளம் சாலையில் வசித்து வந்த இவர் தி.மு.க. மாநில வர்த்தக அணித் தலைவராகவும், தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். நேற்று உபயதுல்லா சகோதரியின் பேரன் திருமணம் தஞ்சையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. திருமணத்தில் பங்கேற்க உபயதுல்லா தனது வீட்டில் இருந்து நேற்று காலை புறப்பட்டார்.
அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாரடைப்பால் உபயதுல்லா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து உபயதுல்லாவின் உடல் கல்லுக்குளம் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அமைச்சர் அஞ்சலி
முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடலுக்கு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், வக்கீல் எஸ்.எஸ்.ராஜ்குமார், மாநகராட்சி கவுன்சிலர் ஜெ.சரீப், வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
உபயதுல்லாவின் இறுதிஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தஞ்சை மேரீஸ்கார்னர் அருகில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்பட்டு காந்திஜிசாலை ஆற்றுப்பாலத்தில் உள்ள ஜூம்மா பள்ளிவாசலில் உடல் அடக்கம் நடக்கிறது. உபயதுல்லாவின் மனைவி ஜன்னத்பீவி கடந்த 2020-ம் ஆண்டு இறந்துவிட்டார். மகன் சாந்திமைதீன் 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது ஒரு மகள் உள்ளார்.
4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்
1962-ம் ஆண்டு தஞ்சை தொகுதியில் கருணாநிதி போட்டியிட்ட போது அவரது வெற்றிக்காக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா கடுமையாக உழைத்தார். 1989-ம் ஆண்டு தஞ்சை சட்டசபை தொகுதியில் தி.மு.க. சார்பில் உபயதுல்லா போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக சட்டசபைக்கு சென்றார். தொடர்ந்து 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வணிகவரித்துறை அமைச்சராக இருந்தாா்.
1987-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தொடர்ந்து 27 ஆண்டுகள் தி.மு.க. தஞ்சை நகர செயலாளராக உபயதுல்லா பணியாற்றினார். தமிழ் மீது கொண்டிருந்த பற்று காரணமாக தஞ்சை முத்தமிழ் மன்றத்தை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி விருதும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற அரசு விழாவில் பேரறிஞர் அண்ணா விருதும் வழங்கப்பட்டது.