ரத்தத்தால் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...!
|முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக ரத்தத்தால் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30-ந்தேதி முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா நடக்கிறது. இந்த பூஜைக்கு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை அழைத்து அறிக்கை ஒன்றை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ளார் . இதில் அவர் ரத்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது , தென்நாட்டு பாதுகாவலர். இது போன்று ஆயிரம் ஆயிரம் வளர்ச்சி திட்டங்களை, முன்னோடி திட்டங்களை, தொலைநோக்கு திட்டங்களை, முதன்மையான திட்டங்களை தாய் தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக வாரி வாரி வழங்கிய கருணையின் வடிவம் புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் அவர்கள் புண்ணிய பூமியாம் பசும்பொன் மண்ணிற்கு நேரிலே வருகை தந்து தெய்வ திருமகனாரின் திருக்கோவிலில் தமிழர் குலச்சாமி, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தந்திட்ட 13.5 கிலோ எடையுள்ள தங்க கவசத்தில் அருள்பாலித்து கொண்டிருக்கும் ஏழாம் படைவீடாம் பசும்பொன்னில் தெய்வ திருமகனாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி அருளாசி பெற்றிட புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடியார் அவர்கள் பொற்பாதம் வணங்கி கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் இரத்த கையெழுத்து இட்டு வணங்கி வரவேற்கிறது, என்று வரவேற்கிறார். மேலும் அறிக்கையின் இறுதியில் "இரத்தம் இரத்த உறவை அழைக்கிறது" என்றும் அவர் கூறியுள்ளார்.