கோவை மாவட்ட திராவிடர் கழக முன்னாள் தலைவர் மரணம்: உடலை சுமந்து சென்ற பெண்கள்
|தனது உடலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாணவர்களின் ஆராய்ச்சிக்காக வழங்க வேண்டும் என்று ராமச்சந்திரன் விருப்பம் தெரிவித்து இருந்தார்.
கோவை,
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் வசந்தம் கு.ராமச்சந்திரன் (வயது 98). பெரியாரின் தொண்டரான இவர் திராவிடர் கழகம் கோவை மாவட்டத்தின் முதல் தலைவராக இருந்து வந்தார்.
இந்தநிலையில் வயது மூப்பு காரணமாக இன்று காலை 7.30 மணியளவில் ராமச்சந்திரன் மரணம் அடைந்தார்.
அவருடைய உடல் பீளமேடு அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவருடைய பேரன் வீட்டில் வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்போது அவரின் உடல் மீது திராவிடர் கழக கொடி அணிவிக்கப்பட்டு இருந்தது. மரணம் அடையும் முன்பு தனது உடலை கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாணவர்களின் ஆராய்ச்சிக்காக வழங்க வேண்டும் என்று ராமச்சந்திரன் விருப்பம் தெரிவித்து இருந்தார்.
பெண்கள் சுமந்து சென்றனர்
தொடர்ந்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக அவருடைய உடலை கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிகாக தானமாக வழங்க குடும்பத்தினர் முன்வந்தனர்.
இதையடுத்து நடந்த இறுதி ஊர்வலத்தில் எந்த வித மூடநம்பிக்கை சடங்களும் இல்லாமல் பெண்களே முன்வந்து வசந்தம் கு.ராமச்சந்திரனின் உடலை சுமந்து சென்று இறுதி ஊர்வல வாகனத்தில் ஏற்றினர். தொடர்ந்து தி.க.வினர் இருசக்கர வாகன அணிவகுப்புக்கு மத்தியில் இறுதி ஊர்வலம் புறப்பட்டு கோவை அரசு மருத்துவ கல்லூரிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உள்ள நிர்வாகிகளிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
வசந்தம் கு.ராமச்சந்திரனுக்கு ரங்கநாயகி என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உண்டு. வசந்தம் கு.ராமச்சந்திரன் 60 ஆண்டுகளாக கோவை மாவட்ட திராவிடர் கழக தலைவராக இருந்து பணியாற்றி பல்வேறு மாநாடுகளை நடத்தி இருந்தார். இதுதவிர இவர் இந்திய தொழில் வர்த்தக சபையின் கவுரவ செயலாளர், தென்னிந்திய சிறு நூற்பாலைகளின் தலைவர் போன்ற பொறுப்புகளும் வகித்து இருந்தார். இவரது மறைவுக்கு தி.க. தலைவர் கீ.வீரமணி உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.