திருச்சி
முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் மகன் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல்
|முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் மகன் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பொன்மலைப்பட்டி:
அதிரடி சோதனை
திருச்சி, அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணா நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கேபிள் சேகர். அ.தி.மு.க.வில் பகுதி செயலாளராக இருந்த இவர், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இவரது மனைவி கயல்விழி, முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் ஆவார். இவர்களது மகன் முத்துக்குமார்(வயது 29).
இந்நிலையில் முத்துக்குமாரின் வீடு உள்ள பகுதிகளில் தற்போது சட்டவிரோத செயல்பாடுகள் நடப்பதாக அரியமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி சுந்தர்ராஜன், அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து முருகன் கோவில் தெருவில் உள்ள முத்துக்குமாரின் வீட்டிலும், குமரன் தெருவில் மெத்தைக்கடை அருகில் உள்ள முத்துக்குமாரின் பண்ணை வீட்டிலும் நேற்று முன்தினம் காலை திருச்சி தெற்கு துணை கமிஷனர் ஸ்ரீதேவி, பொன்மலை உதவி கமிஷனர் காமராஜ், வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் எட்வர்டு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி, தடய அறிவியல் துறை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
2 வெடிகுண்டுகள்
அப்போது முருகன் ேகாவில் தெருவில் உள்ள வீட்டில் மொத்தம் 1¼ கிலோ எடை கொண்ட 2 பால்ரஸ் வெடிகுண்டுகளை (ஆணி மற்றும் பால்ரஸ் கொண்டது) வீட்டில் இருந்து கைப்பற்றி பறிமுதல் செய்தனர். அவற்றுடன் பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் இது குறித்து முத்துக்குமார், கீழ அம்பிகாபுரம் காவேரி நகரை சேர்ந்த சேகரின் மகன் சரவணன், குட்ட பாலு, கணேசன் ஆகியோர் மீது அரியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுசீலா வழக்குப்பதிந்து முத்துக்குமாரை கைது செய்தார். மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். வீட்டில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 2 வழக்கு
இதற்கிடையே மேல அம்பிகாபுரத்தை சேர்ந்த பெரியசாமியின் மனைவியும், முத்துக்குமாரின் பெரியம்மாவும், மாநகராட்சி துப்புரவு தொழிலாளியுமான பார்வதி என்பவர் வளர்த்து வந்த 2 பன்றிகளை, முத்துக்குமார் திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. அவரை வழிமறித்து பார்வதி கேட்டபோது, முத்துக்குமார் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பார்வதி கொடுத்த புகாரின்பேரில் முத்துக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் மதுரையைச் சேர்ந்த முத்துமணி என்பவர் பால்பண்ணை அருகே மோட்டார் சைக்கிளில் பன்றி வலைகளை எடுத்து சென்றபோது, அங்கு வந்த முத்துக்குமார் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பன்றி வலைகளை பறித்து சென்று விட்டதாக அரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரிலும் போலீசார் முத்துக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.