திண்டுக்கல்
அறுவடை காலத்தில் விலை வீழ்ச்சியை சந்திக்கும் விவசாயிகள்
|அறுவடை காலத்தில் விலை வீழ்ச்சியை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்"
என்பது தெய்வ புலவர் திருவள்ளுவரின் வாக்கு. இந்த குறளில் விவசாயிகளின் பெருமையை அற்புதமாக திருவள்ளுவர் கூறியிருக்கிறார். நாம் உயிர் வாழ்வதற்கு உணவு தானியத்தை உற்பத்தி செய்யும் விவசாயிகளை போற்றும் வகையில் அந்த குறளை திருவள்ளுவர் அமைத்தார்.
விவசாயிகள்
உலகுக்கே உணவு அளிக்கும் விவசாயிகள் வணங்க வேண்டியவர்களே. மழை காலத்தில் ஆற்று தண்ணீர், ஆறு வற்றினால் கண்மாய் தண்ணீர், கண்மாய் வறண்டு விட்டால் கிணற்று தண்ணீர், கிணறு காய்ந்து போனால் ஆழ்துளை கிணற்று தண்ணீர் என எங்கு தண்ணீர் கிடைத்தாலும் விவசாயம் செய்து பழக்கம் கொண்டவர்கள் விவசாயிகள்.
குடிநீரை சேமிக்கக்கூட சிந்தனை இல்லாத மனிதர்கள் வாழும் உலகில், பிறரும் சாப்பிட உணவு பொருட்களை விளைவிக்க தண்ணீருக்காக மழையை எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் விவசாயிகள். ஏன், உப்புநீரில் பயிர் விளைந்தால் கடல்நீரில் மட்டுமின்றி கண்ணீரிலும் விவசாயம் செய்து சாதித்து விடுவார்கள் விவசாய பெருமக்கள்.
நிலையான வருமானம் இல்லை
விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்கிறதோ? இல்லையோ? அறுவடை முடிந்து விளைபொருளை விற்றதும் விவசாயிகளுக்கு மிஞ்சுவது கண்ணீர் தான். இதனால் விவசாயிகள் உழுது, உண்டு (சாப்பிட்டு) மட்டுமே வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அனைவரையும் உயிர் வாழ வைப்பது விவசாய தொழில்.
எந்த தொழிலை செய்தாலும் லாபம் எவ்வளவு கிடைக்கும் என்று ஓரளவு கணித்து விடலாம். ஆனால் விவசாயத்தில் முதலுக்கு மோசம் வராமல் இருக்குமா? எனும் அச்சத்தில் சாகுபடி செய்யும் நிலை இருக்கிறது. இதற்கு விவசாயத்தில் நிலையான வருமானம் இல்லாமல் போனதே காரணமாக இருக்கிறது.
குறையும் விவசாயிகள்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயத்தை குடும்ப தொழிலாக மக்கள் மேற்கொண்டனர். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தங்களுடைய விவசாய நிலத்தில் வேலை செய்தனர். அதிகாலையில் எழுந்து விவசாய வேலைகளை செய்துவிட்டு பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் பலர் இருந்தனர்.
விவசாயத்தில் ஈடுபட்டால் வயிறு மட்டுமே நிரம்புகிறது, பை நிரம்புவது இல்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள் தங்களுடைய வாரிசுகளை படிக்க வைத்து வேறுவேலைக்கு அனுப்பி விட்டனர். எனவே விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது. விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவருகின்றன. விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்த பின்னரும் வருமானம் இல்லை என்ற நிலையே நீடிக்கிறது.
ஆதார விலை
எனவே அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதோடு நாட்டை முதுகெலும்பாக தாங்கி பிடிக்கும் விவசாயத்தை கைவிடாமல் தொடர்ந்து மேற்கொள்கின்றனர். நெல், கரும்பு, வாழை, சோளம், மக்காச்சோளம், தினை, கம்பு, காய்கறிகள் என விவசாயிகள் உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றனர்.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒருசில விளைபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து விடுகிறது. அந்த விலைக்கு கூட ஆசைப்படாத விவசாயிகள், ஓரளவு நல்ல விலை கிடைக்கும் என்று கருதி சாகுபடி செய்கின்றனர். ஆனால் அறுவடை நேரத்தில் விலை வீழ்ச்சி அடைந்து விவசாயிகளை வேதனைப்படுத்துவது தொடருகிறது.
இதில் நெல், கொப்பரை தேங்காய் உள்ளிட்ட சிலவற்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கிறது. அது விவசாயிகளுக்கு பெரும் லாபத்தை தராவிட்டாலும் ஏதோ பரவாயில்லை என்று விவசாயிகள் ஆறுதல் அடைகின்றனர்.
காய்கறிகள்
ஆனால் குறைந்தபட்ச ஆதார விலை இல்லாத விளைபொருட்களையும் பயிரிட்டு வருகின்றனர். இதில் காய்கறிகள் முக்கிய விளைபொருட்கள் ஆகும். தமிழகம் காய்கறிகள் உற்பத்தியிலும் பெரும் பங்களிப்பை அளிக்கிறது. தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களுக்கு காய்கறி ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த காய்கறி உற்பத்தியில் உச்சம்தொட்ட மாவட்டங்களில் திண்டுக்கல் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட சில காய்கறிகள் தான் பயிரிடப்படுகின்றன. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்தரி, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், முருங்கை, பீட்ரூட் உள்பட அனைத்து வகையான காய்கறிகளும் விளைகின்றன.
தமிழ்நாடு, கேரளா
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுகளில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் சின்ன வெங்காயத்தை பொறுத்தவரை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்காக திண்டுக்கல்லில் தனி மார்க்கெட் உள்ளது.
மேலும் அய்யலூர் தக்காளி மார்க்கெட்டில் இருந்து தமிழகம், கேரளாவுக்கு தக்காளி அனுப்பப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா மட்டுமின்றி வௌிநாடுகளுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படும் திண்டுக்கல்லில் விவசாயிகளுக்கு மட்டும் உரிய விலை கிடைப்பதில்லை. ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு நேரத்தில் உச்சவிலையில் இருக்கிறது.
விலை வீழ்ச்சி
ஆனால் அறுவடை நேரத்தில் கடுமையாக விலை வீழ்ச்சியை சந்திப்பது வழக்கமாக உள்ளது. சின்ன வெங்காயம், தக்காளி, கேரட் உள்ளிட்டவை கடந்த மாதம் வரை நல்ல விலையில் இருந்தன. அறுவடை நேரமான தற்போது அவை ரூ.10-க்கு கூட விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுவது இல்லை. இதனால் அறுவடை கூலிக்கு கூட கட்டுப்படியாகாமல் சாலை ஓரத்தில் கொட்டி செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
கடனில் இருந்து மீளமுடியாமல் தத்தளிக்கும் நிலையில் விவசாயிகளின் வாழ்க்கை இருக்கிறது. இந்த நிலை மாறி, விவசாயம் நஷ்டம் ஏற்படாத தொழிலாக மாற வேண்டும். இதற்கு காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கூறியதாவது:-
மக்காச்சோளம்-முருங்கை
பழனி கோம்பைபட்டி துரைச்சாமி:- பழனி, தொப்பம்பட்டி பகுதிகளில் மக்காச்சோளம், சூரியகாந்தி அதிகமாக பயிரிடப்படுகிறது. வெளியூர் வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். ஆனால் அறுவடை நேரத்தில் விலை கடுமையாக வீழ்ந்து விடுகிறது. இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்பவர்கள், அதை திரும்ப செலுத்த முடியவில்லை. விவசாயத்தை காப்பதற்கு மக்காச்சோளம், சூரியகாந்திக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்கு மத்திய-மாநில அரசுகள் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தம்மனம்பட்டி கணேசன்:- நான் 2 ஏக்கரில் முருங்கை பயிரிட்டு உள்ளேன். தற்போது பூ பிடிக்கும் பருவமாக உள்ளது. காய் வருவதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகும். கடந்த பொங்கல் பண்டிகையின் போது ஒரு கிலோ ரூ.150-க்கு முருங்கைக்காய் விலை போனது. தற்பொழுது ரூ.60-க்கு விற்கிறது. முருங்கைக்கு நிரந்தர விலை இல்லாததால் விவசாயிகள் பெரும்பாலும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். முருங்கைக்காய்களை பதப்படுத்தி வைக்க கிட்டங்கியை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதேபோல் முருங்கைக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க வேண்டும்.
தக்காளி
கொம்பேறிபட்டி விவசாயி ராமர்:- மழைக்காலம், வரத்து குறைவாக இருக்கும் போது தக்காளி கிலோ ரூ.100 வரை விற்பனையாகிறது. ஆனால் விளைச்சல் அடைந்து வரத்து அதிகரித்தால் விலை அதலபாதாளத்துக்கு சென்று கிலோ ரூ.2-க்கு விற்பனையாகிறது. தக்காளிக்கு நிலையான விலை எப்போதும் இருப்பதில்லை. இதனால் தக்காளி விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தக்காளிக்கு விலை இல்லாத காலங்களில் சந்தைக்கு வாகனங்களில் கொண்டு செல்லும் செலவுக்கு கூட விலை போகாமல் கால்நடைகளுக்கு தீவனமாக போடப்படுகிறது. எனவே அரசு தக்காளிக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். மேலும் அய்யலூரில் தக்காளி பதப்படுத்தும் நிலையம் அமைக்கும் பணி மந்தமாக நடக்கிறது. அந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
ஒண்டிபொம்மன்நாயக்கனூர் முருகேசன்:- கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.1,000-க்கு விற்றது. அறுவடை நேரமான தற்போது ரூ.250-க்கு விற்கிறது. தக்காளியை இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ய ஒட்டன்சத்திரத்தில் குளிர்சாதன கிட்டங்கி அமைக்க வேண்டும். மேலும் தக்காளி ஜூஸ் தயாரித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் விவசாயிகள் நிரந்தரமாக பயன்பெறுவார்கள். அதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
கேரட், முட்டைகோஸ்
மன்னவனுர் பால்பாண்டி:- கடந்த சில ஆண்டுகளாக கேரட்டின் விலை அதிக விலைக்கு விற்பனை ஆனது. தற்போது கிலோ ரூ.10-க்கும் குறைவாகவே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். விவசாய வேலைக்கு சம்பளம் அதிகரித்து விட்ட நிலையில், கேரட் கிலோ ரூ.10-க்கு கூட விற்காததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையில் பலர் கேரட்டை அறுவடை செய்யாமல் அப்படியே போட்டுவிட்டனர். கேரட் உள்பட அனைத்து காய்கறிகளுக்கும் ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்.
பள்ளங்கி சாய்ராம் பாபு:- மலைப்பகுதியில் விளையும் காய்கறிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் வியாபாரிகள் சில்லறை விற்பனையில் அதிக விலைக்கு விற்கின்றனர். தற்போது கேரட், பச்சை பட்டாணி விலை வீழ்ச்சி அடைந்த நிலையில், முட்டைக்கோசையும் வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. இதனால் அவை மாடுகளுக்கு உணவாக அளிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
குறைந்தபட்ச ஆதார விலை அவசியம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெருமாள்:- நமது நாட்டில் தொடர்ச்சியாக நஷ்டத்தை ஏற்படுத்தும் தொழிலாக விவசாயம் உள்ளது. விவசாயத்தால் பொருளாதாரரீதியாக முன்னேற முடியாமல் பலர் வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர். இதற்கு விளைபொருட்களுக்கு நிலையான விலை கிடைக்காததே காரணம் ஆகும். விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு விளைபொருட்களை வாங்கி அதிக விலை வைத்து மார்க்கெட்டில் விற்கின்றனர். குறிப்பாக சின்ன வெங்காயம் அறுவடை தற்போது நடக்கிறது. விவசாயிகளிடம் ரூ.10-க்கு வாங்கப்படும் சின்ன வெங்காயம் மார்கெட்டில் ரூ.50 வரை விற்கப்படுகிறது.
இதனால் விளைபொருளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நஷ்டம் தான் மிஞ்சுகிறது. எனவே காய்கறிகள் உள்பட அனைத்து விளைபொருட்களுக்கும் ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும். மேலும் உற்பத்தி செலவுடன் 50 சதவீதத்தை கூடுதல் வைத்து விலையை நிர்ணயிக்க வேண்டும். அதன்மூலம் விவசாயம் நஷ்டத்தை கொடுக்காத தொழிலாக மாறும். அதனால் விவசாயிகள் ஆர்வமுடன் உணவு பொருள் உற்பத்தியில் ஈடுபடுவார்கள். விவசாயிகளுக்கு வருமானம் வந்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும். விவசாயத்தை நம்பி இருக்கும் இந்தியாவில் அனைத்து விளை பொருட்களுக்கும் ஆதார விலை அவசியம் நிர்ணயிக்க வேண்டும்.
காய்கறிகள் சாகுபடி பரப்பளவு
திண்டுக்கல் மாவட்டத்தில் பயிரிடப்படும் சில காய்கறிகளின் சாகுபடி பரப்பளவு விவரம் வருமாறு:-
தக்காளி-2,396 எக்டேர்,
சி.வெங்காயம்-3,486 எக்டேர்
கேரட்-1,009 எக்டேர்
முருங்கை-5,513 எக்டேர்
பூசணிக்காய்-261 எக்டேர்
புடலங்காய்-139 எக்டேர்
காய்கனிகள் பதப்படுத்தும் நிலையம்
வேடசந்தூர் அருகே சேனன்கோட்டையில் முருங்கை, காய்கனிகள் பதப்படுத்தும் நிலையம் திறக்கப்படாமல் இருக்கிறது. இதுகுறித்து வேளாண்மை அலுவலர் கிருஷ்ணகுமார் கூறுகையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அரசின் சார்பில் இயங்கும் துணை நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன் ஒப்படைக்கப்பட்டது. இன்னும் ஒரு சில மாதங்களில் பதப்படுத்தும் பணி தொடங்கும். அப்போது அனைத்து காய்கனிகளையும் பாதுகாத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முருங்கை கீரையை பொடியாக்கி அதனை ஏற்றுமதி செய்யும் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது என்றார்.