ராமநாதபுரம்
பருத்தி விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை
|ராமநாதபுரம் அருகே பல கிராமங்களில் பருத்தி விளைச்சல் குறைந்து விலையும் குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
ராமநாதபுரம் அருகே பல கிராமங்களில் பருத்தி விளைச்சல் குறைந்து விலையும் குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
பருத்தி சாகுபடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருஉத்தரகோசமங்கை, களரி, பனைக்குளம், நல்லாங்குடி, ஆனைகுடி காவனூர், சத்திரக்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் மிளகாய் மற்றும் பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரையிலும் பருத்தி விவசாயம் நடைபெறும் சீசன் ஆகும். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தர கோசமங்கை, களரி, மேலசீத்தை, ஆனைகுடி உள்ளிட்ட பல கிராமங்களில் பருத்தி சீசனானது இந்த மாத இறுதியுடன் முடிவடைகிறது.
சீசன் முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் பருத்தி விளைச்சலும் குறைந்து விலையும் குறைந்து உள்ளதாக விவசாயிகள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர்.
விலை குறைவு
இதுபற்றி நல்லாங்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:- இந்த ஆண்டு பருத்தி விவசாயம் தொடங்கிய சீசனில் நல்ல விலை இருந்ததுடன் விளைச்சலும் நன்றாக இருந்தது. ஒரு கிலோ பருத்தி ரூ. 110 வரையிலும் விலை போனது.
ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முழுமையாக கோடை மழை பெய்யாததால் பருத்தி விளைச்சல் குறைந்ததோடு மட்டுமில்லாமல் பருத்தி விலை பாதியாக குறைந்துவிட்டது. ஒரு கிலோ தற்போது ரூ.65-க்கு மட்டுமே விலை போகிறது.பருத்தி சீசனும் முடிவடையும் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.