திருப்பூர்
பாதுகாப்பு கேட்டு இரவு நேரத்தில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்த விவசாயி
|உடுமலை துணை போலீ்ஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு இரவு நேரத்தில் விவசாயி குடும்பத்துடன் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலை துணை போலீ்ஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு இரவு நேரத்தில் விவசாயி குடும்பத்துடன் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலையை அடுத்த ஜோத்தம்பட்டி பால்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. விவசாயி. இவர் மனைவி ஜோதிமணி, மகன்கள் இளமுகில், கார்த்திகேயன், தாயார் கன்னியம்மாள் மற்றும் மருமகள், பேரன், பேத்தியுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் தங்கள் வீட்டில் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால் துணை சூப்பிரண்டு அலுவலகத்திலேயே தங்கியிருக்கப் போவதாகக் கூறி குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேற்று இரவு அங்கு வந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
'குடும்ப வறுமை மற்றும் விவசாயத்தின் வறட்சி காரணமாக 7 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கடனுக்கு வட்டியை சரியாக செலுத்த முடியவில்லை. அதனால் கடன் கொடுத்தவர், நம்பிக்கைக்காக இருக்கட்டும் என்று சொல்லி தோட்டத்து பத்திரத்தை எங்களிடமிருந்து வாங்கி, பின்னர் ஏமாற்றி கிரயம் செய்துள்ளார். அதன் பிறகு வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்தநிலையில் தற்போது இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் மீது கல் எறிவது, கொலை மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே வீட்டில் தங்குவதற்கு அச்சமாக உள்ளதால் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடும்பத்துடன் தங்கியிருக்க முடிவு செய்துள்ளோம்'என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.