< Back
மாநில செய்திகள்
கோவில் நிலங்களை மீட்டு விவசாய பயன்பாட்டுக்கு குத்தகைக்கு விட வேண்டும்
திருப்பூர்
மாநில செய்திகள்

கோவில் நிலங்களை மீட்டு விவசாய பயன்பாட்டுக்கு குத்தகைக்கு விட வேண்டும்

தினத்தந்தி
|
21 July 2022 10:26 PM IST

கோவில் நிலங்களை மீட்டு விவசாய பயன்பாட்டுக்கு குத்தகைக்கு விட வேண்டும் என்று குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கோவில் நிலங்களை மீட்டு விவசாய பயன்பாட்டுக்கு குத்தகைக்கு விட வேண்டும் என்று குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

பாசனக் கால்வாய்கள்

கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் விவேகானந்தன், உடுமலை தாசில்தார் கண்ணாமணி, மடத்துக்குளம் தாசில்தார் சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-

பாலதண்டபாணி:-பி.ஏ.பி. தொகுப்பணைகள் நிரம்பியுள்ளதால் பாசனத்துக்காக விரைவில் தண்ணீர் திறக்கப்படும். எனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப்பணியாளர்கள் மூலம் பாசனக்கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். சுண்டக்காம்பாளையத்தில் உள்ள நிலவியல் பாதை தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ரூ.21 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பீட்டில் இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்ற அறிவிப்பு வெளியிட்ட நிலையிலும் ஆக்கிரமிப்பு அகற்றி சாலை மீட்கப்படாததால் சிறுகுறு விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

பரமசிவம்:-எலையமுத்தூர் பகுதியில் 23 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்று அமராவதி ஆற்றுக்கு அருகில் கிணறு வெட்டி கோழிப்பண்ணைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்கிறது. அதைத்தடுக்க வேண்டும். நீண்டநாள் பிரச்சினையாக உள்ள ஜம்புக்கல்கரடு ஆக்கிரமிப்பு பிரச்சினையை உண்மைநிலை கண்டறிந்து விதி மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மின்சார வாரியத்தில் போதிய உபகரணங்கள் இல்லாததால் மின் இணைப்பு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. பிரதம மந்திரி கவுரவ நிதி உதவித்திட்டத்தில் விவசாயிகளின் ஆவணங்களைப் பெறுவதற்கு அந்தந்த பகுதிகளில் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும்.

கனிமவளக்கொள்ளை

மதுசூதனன்:-தரிசு நிலங்களாகவும், ஆக்கிரமிப்பிலும் இருக்கும் கோவில் நிலங்களை மீட்டு விவசாயிகளின் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும். வாளவாடி வரதராஜப்பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 32 ஏக்கர் நிலம் புதர்மண்டி வன விலங்குகள் தங்குவதற்கும் சமூக விரோதச் செயல்களுக்கும் பயன்பட்டு வருகிறது. இதுபோல உடுமலை மாரியம்மன் கோவில் நிலம், சிவசக்தி காலனி கோவில் நிலம் உள்ளிட்ட கோவில் நிலங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

வாளவாடி ரெட்டிபாளையம் வழித்தடத்தில் ரூ.65 லட்சம் செலவில் போடப்பட்ட தார்ச்சாலை ஒரே மாதத்தில் சேதமடைந்துள்ளது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னைநார்த் தொழிற்சாலைகளின் வீழ்ச்சியால் தேங்காய் விலை குறைந்து தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தென்னை சார்ந்த தொழில்களை மீட்க வேண்டும். உரக்கடைகளில் டி.ஏ.பி. வாங்கினால் தான் யூரியா என்பது போன்று விவசாயிகள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். வேளாண்மைத்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பைபாஸ் சாலை அமைப்பதற்காக விதிகளை மீறி பட்டா நிலங்களில் மண் அள்ளப்படுகிறது. மெட்ராத்தி, ராமேகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் உள்பட 100 ஏக்கருக்கு மேல் தோண்டப்பட்டு கனிமவளக் கொள்ளை நடைபெறுகிறது.

மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்

அருணாச்சலம்:-வேடப்பட்டி, மைவாடி உள்ளிட்ட பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் பெரும்பாலான நேரங்களில் அலுவலகத்தில் இருப்பதில்லை.

மௌனகுருசாமி:-கொங்கல்நகரம் பகுதியில் மும்முனை மின்சாரம் எப்போது வருகிறது, எப்போது போகிறது என்று தெரியாததால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். குடிமங்கலம் ஒன்றியத்தில் பல பகுதிகளில் நீர் வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

நீரா பெரியசாமி:-கொண்டம்பட்டியிலிருந்து வசவநாயக்கன்பட்டி உப்பாறு வரை தார்ச்சாலை அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது. காற்றாலைகள் அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளில் காலாவதியாகி விடும் என்று விதி உள்ளது. ஆனால் குடிமங்கலம் பகுதியில் காலாவதியான காற்றாலைகள் இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆபத்து ஏற்படும். அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரீதர்:-குளங்களில் மண் எடுக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் உரிய பதில் அளிப்பதில்லை. குளங்களை ஆய்வு செய்து மண் எடுக்க வாய்ப்பிருக்கும் குளங்களில் மட்டும் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

Related Tags :
மேலும் செய்திகள்