< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூரில் புதிய திருவோணம் வட்டம் உருவாக்கம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மாநில செய்திகள்

தஞ்சாவூரில் புதிய திருவோணம் வட்டம் உருவாக்கம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தினத்தந்தி
|
2 March 2024 7:49 PM IST

4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி புதிய திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களையும் சீரமைத்து, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022-2023-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், "தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து புதிய திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும்" என்னும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

ஒரத்தநாடு வட்டத்திலுள்ள திருவோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், அத்தியாவசியச் சேவைகளான சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளையும், வருவாய்த் துறையின் பிற சேவைகளையும் பெறுவதற்காக ஏறத்தாழ 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரத்தநாடு வட்டத்தின் தலைமையிடத்திற்கு மிகுந்த சிரமத்துடன் வந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்குப் பொருளாதாரச் செலவுகள் அதிகமாகின்றன. அத்துடன் இந்தச் சேவைகளைப் பெறுவதற்காக அவர்கள் நாள் முழுவதும் செலவிட்டு அலையவும் வேண்டியுள்ளது.

ஒவ்வொரு நாளும் பொது மக்களின் துயர்துடைப்பதில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிற தமிழ்நாடு முதல்-அமைச்சர் திருவோணம் பகுதி மக்களின் சிரமங்கள் தம்முடைய கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து அவற்றை உடனடியாகக் களைவதற்கு முடிவு செய்தார். அந்த முடிவைச் செயல்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களையும் சீரமைத்து, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவோணம் வருவாய் வட்டத்தினை உருவாக்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்குரிய அரசாணை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்