ஆதிதிராவிடர்-பழங்குடியினர் விடுதிகளை ஆய்வு செய்ய மாநில, மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைப்பு
|ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய மாநில, மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அனைத்து அரசு மாணவர் விடுதிகளின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, அதன் கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், கல்வி சூழல், உணவுத்தரம், பாதுகாப்பு, கண்காணிப்பு ஆகியவற்றை மறுசீரமைக்க தேவையான பரிந்துரைகளை வழங்க உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று 2022-23-ம் ஆண்டு பட்ஜெட் உரையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்து இருந்தார். அதன் அடிப்படையில், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன் தலைவராக மாவட்ட கலெக்டர் இருப்பார். உறுப்பினர்களாக கோட்டாட்சியர் அல்லது சார் ஆட்சியர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், பள்ளிக்கல்வி முதன்மை கல்வி அலுவலர் மற்றும் உயர் கல்வி மண்டல இணை இயக்குனர், பொது நல நோக்கில் ஆர்வமுள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆண், பெண் என 2 பேர், அரசு பொது மருத்துவர், அரசு உளவியல் மருத்துவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் தொழில் வழிகாட்டல் வழங்குபவர், மாவட்ட விளையாட்டு துறையின் விளையாட்டு அலுவலர், மாவட்ட மேலாளர் மற்றும் இளநிலை பொறியாளர்-தாட்கோ, பழங்குடியினர் நல திட்ட அலுவலர் ஆகியோர் இருப்பார்கள்.
மாநில அளவிலான குழு
மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டத்தை ஆண்டுக்கு ஜூலை, அக்டோபர் மற்றும் ஜனவரி என 3 முறை நடத்த வேண்டும். ஆதிதிராவிடர் நல விடுதிகளை ஆய்வு செய்து குறை, நிறைகள் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கைகள் குறித்து கூட்டத்தில் கலந்தாலோசித்து தேவையான பரிந்துரைகளை ஆதிதிராவிடர் நல இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
மாநில அளவிலான உயர்நிலை கண்காணிப்பு குழுவின் தலைவராக தமிழக தலைமைச் செயலாளர் இருப்பார். உறுப்பினர்களாக ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர், காவல் துறை தலைவர் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்), ஆதிதிராவிடர் நல இயக்குனர், பழங்குடியினர் நல இயக்குனர், தாட்கோ மேலாண்மை இயக்குனர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தீனபந்து, செல்லப்பன், குகானந்தம், அகரம் அறக்கட்டளையை சேர்ந்த தன்னார்வலர் ஜெயஸ்ரீ தாமோதரன், அண்ணா பல்கலைக்கழக விரிவுரையாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் இருப்பார்கள்.
இந்த குழு ஆகஸ்டு மற்றும் பிப்ரவரி மாதங்களில் என ஆண்டுக்கு 2 முறை கூட்டங்கள் நடத்தி விடுதி முன்னேற்றத்துக்குரிய வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை அரசுக்கு வழங்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.