ராமநாதபுரம்
விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல்விதைகள்
|ஆர்.எஸ்.மங்கலத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல்விதைகள் வழங்க வேளாண்மை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல்விதைகள் வழங்க வேளாண்மை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
நெல் சாகுபடி
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆர்.எஸ்.மங்கலம் யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் ஆண்டுதோறும் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் நிலத்தை தயார் செய்து நெல் சாகுபடிக்கு தயார் நிலையில் உள்ளனர்.
வட்டார விவசாயிகள் உயர் விளைச்சல் ரகமான ஆர்.என்.ஆர்-15048, பி.பி.டி-5204, என்.எல்.ஆர்-34449, டி.கே.எம்-13 போன்ற ரகங்களை வழக்கமாக பயிரிட்டு வருகின்றனர். நல்ல விளைச்சலுக்கு தரமான சான்று பெற்ற விதையை பயன்படுத்துவது இன்றியமையாதது.
தரமான சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதன் மூலம் முளைப்புத்திறனை அதிகரித்து சீரான பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படுவதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கிறது.
ஆய்வு
நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்வதற்கு ஆர்.என்.ஆர்., பி.பி.டி., என்.எல்.ஆர். மற்றும் டி.கே.எம்.-13 போன்ற நெல் ரகங்கள் 90 மெட்ரிக்டன் நெல் சான்று விதைகள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு உள்ள நெல் விதைகள், பயறு விதைகள் நுண்ணூட்ட உரங்கள், இருப்பு பதிவேடுகள் மற்றும் முளைப்புத்திறன் பதிவேடுகளை வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) கண்ணையா மற்றும் வேளாண்மை துணை இயக்குனர் சேக்அப்துல்லா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் நெல் விதைகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க அறிவுரை வழங்கினர். இந்த ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி ,வேளாண்மை அலுவலர் கலைபிரியா, கிடங்கு மேலாளர் முத்துலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.