கள்ளக்குறிச்சி
கள்ளத்தொடர்பை கண்டித்தவியாபாரி எரித்துக்கொலை
|உளுந்தூர்பேட்டை அருகே கள்ளத்தொடர்பை கண்டித்த வியாபாரி எரித்துகொலை செய்யப்பட்டது தொடர்பாக தொழிலாளியுடன் கள்ளகாதலியை போலீசார் கைது செய்தனர்
கள்ளக்குறிச்சி
வியாபாரி
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையை சேர்ந்த ஆறுமுகம்(வயது 50). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக மனைவியை பிரிந்த ஆறுமுகம் விருத்தாசலம் பாலக்கரையில் பட்டாணி கடை வைத்து அப்பகுதியிலேயே வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார்.
அதேபோல் விருத்தாசலம் தாலுகா கருவேப்பிலங்குறிச்சி அருகே முருகன்குடியை சேர்ந்த அன்பழகன் மனைவி கவிதா(28). கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த இவர் ஆறுமுகத்தின் கடைக்கு வந்து சென்றபோது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கடந்த 2 ஆண்களாக பாலக்கரையில் உள்ள வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
நண்பருடன் கள்ளக்காதல்
இந்த நிலையில் தனது நண்பரான உளுந்தூர்பேட்டை அருகே பு.கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்த வைத்தி(55) என்பவர் ஆறுமுகத்தின் கடைக்கு அடிக்கடி வந்து சென்றபோது கவிதாவுடன் வைத்திக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ள தொடர்பாக மாறியது. இது ஆறுமுகத்துக்கு தெரிந்ததும் அவர் கவிதாவை பலமுறை கண்டித்தும் வைத்தியுடனான தொடர்பை கைவிட அவர் மறுத்துவிட்டார்.
சம்பவத்தன்று இரவு கவிதா தனது உறவினர் வீ்ட்டுக்கு சென்று வருவதாக ஆறுமுகத்திடம் கூறிவிட்டு சென்றார்.
எரித்துக்கொலை
ஆனால் அவர் மீது சந்தேகம் அடைந்த ஆறுமுகம் நேற்று முன்தினம் காலை பெட்ரோல் பாட்டிலுடன் பு.கிள்ளனூரில் உள்ள வைத்தியின் வீட்டுக்கு சென்றார். அங்கு கவிதாவை கண்ட அவர் தன்னுடன் வருமாறு அழைத்தார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் தன்னிடம் இருந்த பெட்ரோலை கவிதா மீது ஊற்ற முயன்றார். அப்போது வைத்தியும், கவிதாவும் ஆறுமுகத்திடம் இருந்த பாட்டிலை பிடுங்கி அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் கீழே விழுந்தார்.
இந்த சம்பவத்தை திசை திருப்புவதற்காக வைத்தியும், கதவிதாவும் ஆறுமுகத்தை 108 ஆம்புன்ஸ் மூலம் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.
கைது
இது குறித்து ஆறுமுகத்தின் தாய் கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வைத்தி, கவிதா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளத்தொடர்பை கண்டித்த வியாபாரியை எரித்துகொலை செய்தது தொடர்பாக அவரது நண்பருடன் கள்ளகாதலியை போலீசார் கைது செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.