மயிலாடுதுறை
நிலத்தை மோசடியாக விற்றதாக தந்தை- மகன் மீது வழக்கு
|நிலத்தை மோசடியாக விற்றதாக தந்தை- மகன் மீது வழக்கு செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாயூநாதர் கோவிலுக்கு பூஜை செலவீனங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மாப்படுகை விவசாய நிலங்களை சட்டத்துக்கு புறம்பாக மனை பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்து அரசையும், பொதுமக்களையும் ஏமாற்றி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நாராயணபுரம், மாயூரநாதர் நகர் ஆகிய பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராத மாப்படுகை, சித்தர்காடு ஊராட்சி மற்றும் மயிலாடுதுறை நகராட்சியை கண்டித்தும் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நேற்று முன்தினம் மயிலாடுதுறை அருகே மாப்படுகை ரெயில்வே கேட் அருகில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதன் எதிரொலியாக மோசடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மற்றும் வருவாய் துறை சார்பில் போராட்டக்காரர்களிடம் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சங்க மாவட்ட தலைவர் ராயர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து மயிலாடுதுறை கூறைநாடு ஈவேரா தெருவை சேர்ந்த பாண்டியன், அவரது மகன் அரவிந்தன் ஆகிய 2 பேர் மீதும் பொதுமக்களிடம் நிலத்தை மோசடியாக விற்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.