திருவள்ளூர்
செம்மர வியாபாரியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனசரகர் கைது
|செம்மர வியாபாரியிடம் போக்குவரத்து அனுமதி பரிந்துரை கடிதத்திற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வனசரகர் மற்றும் அவரது டிரைவர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வனசரகர் அலுவலகம் மாதர்பாக்கத்தில் உள்ளது. இங்கு வன சரகராக பணியாற்றி வருபவர் ஞானப்பன் (வயது 46). அவரது தற்காலிக ஜீப் ஓட்டுனர் யுவராஜ் (50). ஆந்திர மாநிலம் வரதையாப்பாளையத்தை சேர்ந்த உரிமம் பெற்ற செம்மர வியாபாரி முனிபாபு (35) என்பவர் மாதர்பாக்கம் பகுதியில் இருந்து செம்மர கட்டைகளை பெங்களூருவுக்கு கொண்டு செல்வதற்காக மாவட்ட வனஅலுவலரிடம் அனுமதிகோரி இருந்தார். இந்த அனுமதிக்காக கும்மிடிப்பூண்டி வன சரகர் அலுவலரான ஞானப்பன் ஒரு சிபாரிசு கடிதம் வழங்கிட வேண்டும். இந்த பரிந்துரை சிபாரிசு கடிதத்திற்கு வனசரகர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
வனசரகர், டிரைவர் கைது
இதனை கொடுக்க மனம் இல்லாத முனிபாபு, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்திருந்தார். இதனையடுத்து நேற்று மாதர்பாக்கம் பகுதியில் உள்ள வனசரகர் அலுவலகத்திற்கு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமசந்திர மூர்த்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான போலீசார் நேரில் வந்தனர்.
ஏற்கனவே கூறியது போல முனிபாபு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க முற்பட்டபோது, அதனை டிரைவர் யுவராஜிடம் கொடுக்கும்படி வனசரகர் ஞானப்பன் கூறியுள்ளார். இதனையடுத்து லஞ்சப்பணத்தை பெற்று கொண்ட டிரைவர் யுவராஜ், வனசரகர் ஞானப்பன் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.