சதுரகிரி வனப்பகுதியில் பற்றிய எரிந்த காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது - வனத்துறை
|சதுரகிரி வனப்பகுதியில் நேற்று முன்தினம் பற்றி எரியத் தொடங்கிய காட்டுத்தீ, இன்று ஓரளவு கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்க சுவாமி கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவிலில் நேற்று முன்தினம் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் விருதுநகர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்காக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர். பின்னர் அவர்கள் மலைப்பகுதி வழியாக கோவிலுக்கு நடந்து சென்றனர்.இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில், மலைப்பாதையை ஒட்டிய தவசிப்பாறை 5-வது பீட் வனப்பகுதியில் இரட்டை லிங்கம் மற்றும் பச்சரிசிப்பாறை இடையே உள்ள நாவலூற்று பகுதியில் திடீரென காட்டுத் தீப்பற்றியது.
தீ வேகமாக பரவியது.இதனால் அமாவாசை தரிசனத்திற்காக சென்ற பக்தர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்கி வர தடை விதிக்கப்பட்டு மலையில் உள்ள கோவில் வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.சாப்டூர் வனச்சரகர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தீ தடுப்பு காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் வனப்பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அப்பகுதியில் பலத்த காற்று வீசி வந்ததால் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது.தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.இந்நிலையில் பெரும் போராட்டத்திற்கு பின் இன்று காட்டு தீயை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது .