செங்கல்பட்டு
கடந்த ஓராண்டாக வனத்துறை சிறப்பாக செயல்படுகிறது 13 ராம்சார் காடுகள் கண்டறியப்பட்டு, சர்வதேச அங்கீகாரம் - அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
|கடந்த ஓராண்டாக வனத்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் 13 ராம்சார் காடுகள் கண்டறியப்பட்டு, சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அருகே உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வருகின்ற 24-ந் தேதியன்று பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பாக மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்கான விழா ஏற்பாடுகளை நேற்று மாலை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, வனத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், அமைச்சர் கா.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் வனத்துறை மூலம் 33 சதவீத காடுகளின் பரப்பளவை உயர்த்திட ஈர நிலத்திட்டம் சிறப்பாக செயல்படுவது போல், பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டு, இன்னும் 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 32 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டு முதல் கட்டமாக 2.50 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாற்றங்கால்களில் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. இதனை வருகின்ற 24-ந் தேதி நடைபெறவுள்ள விழாவில் முதல்-அமைச்சர் 500 மரக்கன்றுகள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக வனத்துறை சிறப்பாக செயல்பட்டதன் எடுத்துக்காட்டாக 13 ராம்சார் காடுகள் கண்டறியப்பட்டு, சர்வதேச அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.