< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் தடயவியல்துறை குழுவினர் ஆய்வு
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் தடயவியல்துறை குழுவினர் ஆய்வு

தினத்தந்தி
|
19 July 2022 2:34 PM IST

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வளாகத்தை சுற்றிலும் 3வது நாளாக இன்று போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தவர் மாணவி ஸ்ரீமதி(வயது 17). பள்ளி விடுதியில் தங்கி படித்த இந்த மாணவி, கடந்த 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார்.

மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனிடையே சமூக வலைத்தளங்களில் மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கூறி பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வந்தது.

இதன் மூலமாக நேற்று முன்தினம், மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். ஒரு கட்டத்தில் இது பெரும் கலவரமாக வெடித்து, பள்ளிக்கு தீ வைத்தனர். மேலும் அங்கிருந்த பஸ்கள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வளாகத்தை சுற்றிலும் 3வது நாளாக இன்று போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சேதமடைந்த பள்ளியில் தடய அறிவியல் துணை இயக்குனர் சண்முகம் தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எந்த ஆயுதங்களை பயன்படுத்தினார்கள், எந்தெந்த பொருட்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்