< Back
மாநில செய்திகள்
புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பஸ்சில் பாஸ்போர்ட், விசாவை தவறவிட்ட வெளிநாட்டு பெண்
சென்னை
மாநில செய்திகள்

புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பஸ்சில் பாஸ்போர்ட், விசாவை தவறவிட்ட வெளிநாட்டு பெண்

தினத்தந்தி
|
4 Feb 2023 2:54 PM IST

புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ்சில் பிரான்ஸ் நாட்டு பெண் பயணி தவற விட்ட பாஸ்போர்ட், விசாவுடன் கூடிய கைப்பையை போலீசார் மீட்டு ஒப்படைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் பெலிண்டா (வயது 58). இவர் சுற்றுலா விசாவில் மாமல்லபுரம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் செங்கல்பட்டு மாவட்டம், வடக்கு மாமல்லபுரம் பகுதியில் உள்ள அண்ணல் காந்தி தெருவில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டு பெண் பெலிண்டா, தனது பிரான்ஸ் நண்பருடன் புதுச்சேரியில் உள்ள ஆரோவில் பகுதிக்கு தமிழ்நாடு அரசு விரைவு பஸ் மூலம் சென்றிருந்தார். பிறகு மீண்டும் மாமல்லபுரம் வருவதற்காக புதுச்சேரியில் இருந்து கோயம்பேடு செல்லும் அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்பேருந்து மாமல்லபுரம் புறவழிச்சாலை பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றபோது, தனது நண்பருடன் அவசரமாக இறங்கி வந்துவிட்டார். அப்போது ஞாபக மறதியில் அப்பஸ்சிலேயே தனது கைப்பையை தவற விட்டது தெரியவந்தது.

இதனால் பதட்டமடைந்த பெலிண்டா, தான் மீண்டும் பிரான்ஸ் திரும்ப பாஸ்போர்ட், விசா வேண்டுமே என்ற கவலையில் உடனடியாக மாமல்லபுரம் போலீஸ் நிலையம் சென்று பேருந்தில் தவறிவிட்ட தனது கைப்பையை கண்டுபிடித்து தருமாறு கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார். பிறகு மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் துரித நடவடிக்கையாக கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரான்ஸ் நாட்டு பெண் பயணம் செய்த பஸ்சின் தடம் எண்ணை கண்காணிப்பு காமிரா உதவியுடன் கண்டறிந்தார். பின்னர் அதில் கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் ஏறி சோதித்த போது, இருக்கையின் கீழே கைப்பை விழுந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.

அதனை எடுத்து வந்து மாமல்லபுரம் போலீசரிடம் ஒப்படைத்தனர். பிறகு மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் பிரான்ஸ் நாட்டு பெண் பெலிண்டாவை வரவழைத்து பார்ஸ்போர்ட், விசா இருந்த கைப்பையை அவரிடம் ஒப்படைத்தார்.

துரிதமாக செயல்பட்டு அவற்றை கண்டுபிடித்து கொடுத்ததுக்கு பிரான்ஸ் நாட்டு பெண் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். பாஸ்போர்ட்டை உடனடியாக கண்டுபிடித்து ஒப்படைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசாரை செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் பாராட்டி வாழ்த்தினார்.

மேலும் செய்திகள்