தஞ்சாவூர்
வாழை சாகுபடி குறித்து கேட்டறிந்த வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள்
|வாழை சாகுபடி குறித்து கேட்டறிந்த வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள்
தஞ்சை அடுத்த வடுவக்குடியில் வாழை சாகுபடியில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கேட்டறிந்தனர்.
வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள்
திருச்சியை அடுத்த தாயனூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம், வெப்பமண்டல வேளாண்மைக்கான சா்வதேச ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து, வாழை ஆராய்ச்சி மையத்தில் 5 நாட்கள் சா்வதேச கருத்தரங்கை நடத்தியது.
இக்கருத்தரங்கில், இந்தியா, பிரான்ஸ், பெல்ஜியம், இந்தோனேஷியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 18 வாழை ஆராய்ச்சியாளா்கள் கலந்துக்கொண்டனர். இந்நிலையில் கருத்தரங்கின் இறுதிநாளான நேற்று, தேசிய வாழை ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி ரவி, தொழில்நுட்ப அலுவலர் காமராஜ் ஆகியோர் தலைமையில், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் வாழை சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
எதிர்கொள்ளும் சவால்கள்
அதன்படி வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள், தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே வடுவக்குடியை சேர்ந்த முன்னோடி வாழை விவசாயி மதியழகன் என்பவர் தோட்டத்தில் வாழை சாகுபடியில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவசாயியிடம் கேட்டனர்.
ஆராய்ச்சியாளர்களிடம் விவசாயி மதியழகன் கூறுகையில், வாழை லாபமும், மருத்துவ குணமும் கொண்ட ஒரு பயிர். வாழை தண்டு கிட்னியில் ஏற்படும் கல் தாக்குதலை குணப்படுத்தும், வாழைப்பூவில் பல்வேறு உணவு பொருட்கள் தயாரிக்கலாம், வாழையில் பூவம் ரகத்தின் பழம், இலை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மிகவும் சத்தும், ஆரோக்கியமும் கொண்டது.
விவசாயி விளக்கம்
மேலும், வாழை இலையின் பயன்பாடும், பூச்சி, நோய் தாக்குதல், இயற்கை சீற்றங்கள் குறித்தும், அதிலிருந்து வாழைத் தார், வாழை மரங்களை எப்படி பாதுகாக்க வேண்டும், வாழைக்கு தேவையான உரங்கள், அதற்கு தேவையான நுண்ணுட்ட சத்துக்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்.
அப்போது ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விவசாயி மதியழகன் விளக்கமளித்தார். இதனை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பெடுத்துக் கொண்டனர்.
சமாளிப்பது எப்படி?
இதுகுறித்து முதன்மை விஞ்ஞானி ஐ.ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது; நமது நாட்டில் வாழையில் இலை முதல் தண்டுவரை முழுமையாக பயன்படுத்துகிறோம். வெளிநாடுகளில் அதிகளவில் பழங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
மேலும், இங்குள்ள வாழை சாகுபடியில் கையாளும் முறைகள், பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் எப்படி சமாளிக்க வேண்டும் உள்ளிட்டவைகளை தெரிந்துக்கொண்டு. அவர்களின் நாட்டில் வாழை விவசாயிகளிடம், இங்குள்ள முறைகள் குறித்து கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர் என்றார்.