சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.37 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் - 2 பேர் கைது
|சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.37 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் பெரும் அளவு கரன்சிகள் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் செல்ல வந்த பயணிகளை கண்காணித்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த சையத் இப்ராஹிம் (வயது 30), அக்பர் (26) ஆகிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். 2 பேரும் சுற்றுலா பயணிகள் விசாவில் துபாய் செல்ல வந்து இருந்தனர். இவர்களது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கைப்பை மற்றும் உள்ளாடைக்குள் அமெரிக்க டாலர்கள், யூரோ கரன்சி ஆகியற்றை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டு பிடித்தனர்.
2 பேரிடம் இருந்து ரூ. 37 லட்சத்தி 39 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கைது செய்த அதிகாரிகள் பணத்தை கொடுத்து அனுப்பியது யார்? என்று மேற்கொண்டு விசாரணை நடத்தி வருக்கின்றனா்.