நாகப்பட்டினம்
கோடியக்கரை சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்
|சீசன் தொடங்குவதற்கு முன்பு கோடியக்கரை சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.
வேதாரண்யம்:
சீசன் தொடங்குவதற்கு முன்பு கோடியக்கரை சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.
கோடியக்கரை சரணாலயம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு
ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பறவைகள் சீசன் காலமாகும்.
இந்த சீசன் காலத்தில் ரஷியா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள், இந்த சரணாலயத்துக்கு வந்து செல்வது வழக்கம்.
குவியும் வெளிநாட்டு பறவைகள்
தற்போது மழைக்காலத்தை அறிவிக்கும் விதமாக சீசன் தொடங்குவதற்கு முன்பு கோடியக்கரை சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன.
முதலில் ஆர்டிக் பிரதேசத்தில் இருந்து ஆலா பறவைகள் வந்தது. இதை தொடர்ந்து ரஷியாவில் இருந்து கூழைகிடா, சைபீரியாவில் இருந்து பூநாரை,இலங்கையில் இருந்து கடல்காகம், கடல் ஆலா உள்ளிட்ட பறவைகள் வரத் தொடங்கி உள்ளன.
கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
சீசன் ெதாடங்குவதற்கு முன்பே இந்த சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் கூட்டம், கூட்டமாக சிறகு அடித்து பறப்பதையும், நீர்நிலைகளில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து இரை தேடுவதையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
இதுகுறித்து வனச்சரக அலுவலர் அயூப்கான் கூறுகையில், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் இன்னும் 2 வாரங்களில் இந்த சரணாலயத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் கண்டு ரசிக்கலாம். சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.