விருதுநகர்
கோட்டையூரில் முகாமிட்ட வெளிநாட்டு பறவைகள்
|தாயில்பட்டி அருகே கோட்டையூரில் முதன் முதலில் வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டு உள்ளன.
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே கோட்டையூரில் முதன் முதலில் வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டு உள்ளன.
செங்கால் நாரை
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கோட்டையூரில் ஏராளமான புளிய மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பறவைகள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இங்கு வந்து கூடு கட்டி வாழ்வது வழக்கம். இந்தநிலையில் இப்பகுதியில் முதல் முறையாக ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த செங்கால் நாரை வகையை சேர்ந்த பறவைகள் எண்ணற்றவை வந்துள்ளன. நூற்றுக்கணக்கில் இப்பகுதியில் உள்ள மரங்களில் கூடு கட்டி தங்கி இருக்கின்றன. கடந்த 2 மாதங்களாக இனப்பெருக்கத்திற்காக வந்திருக்கும் இப்பறவைகளை கோட்டையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் கண்டு ரசித்து செல்கின்றனர்.
முதன் முதலில்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
தாயில்பட்டி அருகே உள்ள சங்கரபாண்டியபுரம் பகுதியில் உள்ள மரங்களில் வெளிநாட்டு பறவைகள் ஆண்டுதோறும் வந்து கூடு கட்டி வாழ்வது வழக்கம். இந்தநிலையில் தற்போது கோட்ைடயூரில் உள்ள புளிய மரங்களில் முதன் முதலாக வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வந்துள்ளன. இந்த பறவைகளை இப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களும் கண்டு ரசித்து செல்கின்றனர். மரங்கள் அழியாமல் பாதுகாத்தால் பறவை இனங்களை பெருக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.