< Back
மாநில செய்திகள்
வேட்டங்குடி சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
சிவகங்கை
மாநில செய்திகள்

வேட்டங்குடி சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்

தினத்தந்தி
|
24 Oct 2022 12:15 AM IST

தொடர் மழை காரணமாக கண்மாய்கள் நிரம்பியதையடுத்து பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பறவைகள் குவிய தொடங்கியுள்ளது.

திருப்பத்தூர்,

தொடர் மழை காரணமாக கண்மாய்கள் நிரம்பியதையடுத்து பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பறவைகள் குவிய தொடங்கியுள்ளது.

வெளிநாட்டு பறவைகள்

திருப்பத்தூர் அருகே உள்ளது வேட்டங்குடி. இங்குள்ள கொள்ளுக்குடிப்பட்ட கண்மாயில் சுமார் 39 ஏக்கரில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பொதுவாக ஆண்டுதோறும் செப்டம்பா், அக்டோபர் மாதங்களில் வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக இங்கு ஆயிரக்கணக்கில் வந்து தங்கியிருந்து இனப்பெருக்கம் செய்து, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தனது குஞ்சுகளுடன் மீண்டும் இருப்பிடங்களுக்கு திரும்பி சென்றுவிடும்.

இந்நிலையில் இந்தாண்டு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவ மழை முன்கூட்டியே பெய்ய தொடங்கியதால் இந்த கண்மாய் முழுவதும் தண்ணீர் நிரம்பியது. இதையடுத்து முன்கூட்டியே இங்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கியுள்ளன.

விவசாயம் செழிக்கும்

தற்போது இலங்கை, பர்மா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து உண்ணிகொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், நத்தை கொத்திநாரை உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வரத்தொடங்கி உள்ளது.

இதுகுறித்து அக்கிராம மக்கள் தரப்பில் கூறியதாவது:- ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து மழைக்காலங்களில் கூடுகட்டி குஞ்சு பொரித்து அதன் பின்னர் தனது இருப்பிடத்திற்கு செல்வது வழக்கம். அவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் இந்த பறவைகள் வந்து சென்றால் அந்தாண்டு விவசாயம் நன்றாக செழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

பட்டாசு இல்லா தீபாவளி

இந்நிலையில் கடந்தாண்டும், இந்தாண்டும் முன்கூட்டியே மழை பெய்து கண்மாய்கள் நிரம்பியதால் தற்போது பறவைகள் வரத்தொடங்கி உள்ளது. இதனால் இந்தாண்டும் நல்ல விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மேலும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு மற்றும் இரவு வான வேடிக்கை பட்டாசு வெடித்தால் இந்த பறவைகள் மீண்டும் இங்கு வந்து செல்லாது என்பதற்காக பல ஆண்டுகளாக நாங்கள் பட்டாசு இல்லாத தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

மேலும் செய்திகள்