பெரம்பலூர்
ரேஷன் கடைகளில் கட்டாயப்படுத்தி மளிகை பொருட்கள் விற்கப்படுகிறதா?
|ரேஷன் கடைகளில் கட்டாயப்படுத்தி மளிகை பொருட்கள் விற்கப்படுவதாக ரேஷன் அட்டைதாரர்கள் குற்றம்சாட்டினார்கள்.
குற்றச்சாட்டு
பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 282 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசியும் மற்றும் உணவு பொருட்களும் குறைந்த விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில் மத்திய அரசின் மூலம் அரிசியும், கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஆனால் தற்போது சில ரேஷன் கடைகளில் அரிசி தரமற்றதாகவும், பெரும்பாலான ரேஷன் கடைகளில் உணவு பொருட்களின் எடை குறைவாகவும், கூட்டுறவு பண்டக சாலை மூலம் வினியோகிக்கப்படுவதாக கூறப்படும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை கட்டாயமாக வாங்க வற்புறுத்துவதாகவும், முறையாக மண்எண்ணெய் கிடைப்பதில்லை என்றும் ரேஷன் அட்டைதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
நடவடிக்கை எடுக்கப்படவில்லை
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ரேஷன் அட்டைதாரர்கள் புகார் தெரிவித்தாலும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் சில ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விலையில்லா அரிசியை வாங்க முன்வரவில்லையென்றால், அந்த அரிசியை கள்ளச்சந்தையில் விலை நிர்ணயித்து விற்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.
கட்டாயப்படுத்தி விற்பனை
இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆலத்தூர் தாலுகா, வரகுபாடியை சேர்ந்த கல்யாணி:- பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரை ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது கட்டாயப்படுத்தி மளிகை பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. இதனை எதிர்த்து கேட்பவர்களுக்கு அந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. கட்டாயப்படுத்தி மளிகை பொருட்கள் வாங்க சொல்வதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரிசியின் எடை குறைவு
வரகுபாடியை சேர்ந்த அய்யாசாமி:- சில ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் எடை குறைவாக உள்ளது. சில சமயங்களில் தரமற்ற அரிசி வழங்குவதால், அதை வைத்து சாதம் சமைக்க முடியவில்லை. மத்திய அரசு மூலம் வழங்கப்படும் அரிசி, கோதுமை ஆகியவை சரியாக கிடைப்பதில்லை. கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை சில்லறை கடைகளில் விற்கும் விலையை விட கூடுதலாக இருக்கிறது.
மண்எண்ணெய் கிடைப்பதில்லை
குன்னம் தாலுகா, அத்தியூரை சேர்ந்த பிரசாந்த்:- எங்கள் ஊரில் உள்ள ரேஷன் கடை பழுதடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் ஒழுகுவதால் உணவு பொருட்கள் மழைநீரில் நனைந்து வீணாகி வருகிறது. எனவே ரேஷன் கடையை புதுப்பிக்க வேண்டும். ரேஷன் கடையில் மாதம், மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்எண்ணெய் கிடைப்பதில்லை. கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படும் மளிகை பொருட்கள் மாதந்தோறும் வீடுகளில் குவிந்து வருகிறது. அதனை பயன்படுத்த முடியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் மண்எண்ணெய் சரியாக வினியோகிப்படவில்லை என்பது பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. சில ரேஷன் கடைகளில் கட்டுனர் இல்லாததால், வெளி ஆட்களை வைத்து வேலை செய்யும் நிலை ஏற்படுகிறது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் உணவு பொருட்கள் முறையாக கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரேஷன் அட்டைதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.