< Back
மாநில செய்திகள்
சுரங்கப்பாதை பணிக்காக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்- தேஜஸ் நாளை திருச்சியுடன் நிறுத்தம்
மதுரை
மாநில செய்திகள்

சுரங்கப்பாதை பணிக்காக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம்- தேஜஸ் நாளை திருச்சியுடன் நிறுத்தம்

தினத்தந்தி
|
11 April 2023 1:43 AM IST

சுரங்கப்பாதை பணிக்காக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. தேஜஸ் நாளை திருச்சியுடன் நிறுத்தம் செய்யப்படுகிறது.


மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட திண்டுக்கல்-திருச்சி ரெயில் பாதையில் உள்ள தாமரைப்பாடி-வடமதுரை ரெயில் நிலையங்களுக்கு இடையே சுரங்கப்பாதை பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ஒரு சில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16848) இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை ஆகிய 2 நாட்களுக்கு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இதற்காக அந்த ரெயில் இன்று ஒரு நாள் மட்டும் மானாமதுரை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ரெயில், மேற்கண்ட நாட்களில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை ஆகிய ரெயில் நிலையங்களுக்கு செல்லாது. மறுமார்க்கத்தில், மயிலாடுதுறை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16847) நாளை திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் சென்றடையும். அதேபோல, குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) இன்று விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரெயிலுக்கு மானாமதுரையில் தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127) நாளை (புதன்கிழமை) திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் சென்றடையும். இந்த ரெயில் மானாமதுரை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

சென்னை-மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22671) நாளை திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.22672) நாளை மதுரையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக திருச்சியில் இருந்து வழக்கமான நேரத்துக்கு சென்னை புறப்பட்டு செல்லும். இந்த திடீர் மாற்றத்தால் மேற்கண்ட ரெயில்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்