காஞ்சிபுரம்
தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சீபுரத்தில் ரேஷன் கடைகளில் 'கியூ ஆர் கோடு' மூலம் பணப்பரிவர்த்தனை
|தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ‘கியூ ஆர் கோடு' மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறையை கூட்டுறவு சங்கப்பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 மருந்தகங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், காஞ்சீபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் 602 கூட்டுறவு ரேஷன் கடைகள் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் மின்னணு பரிமாற்றம் ( 'கியூ ஆர் கோடு') மூலம் பணமற்ற பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டெம்பிள் சிட்டியில் உள்ள எம்.வி.எம்.பி. நகர் ரேஷன் கடையில் சென்னை, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்.
இதனால் பொதுமக்கள் தங்கள் வாங்கும் பொருட்களுக்கு நேரடியாக பணம் வழங்காமல் ஸ்மார்ட் போன் மூலமாக 'கியூ ஆர் கோடு' பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சீபுரம் மண்டல கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் முருகன், காஞ்சீபுரம் மாவட்ட கூடுதல் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலையின் இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குனர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.