தேனி
மாற்றுத்திறனாளிகளுக்கு கைத்தறி துண்டு கொடுத்து மனுக்கள் வாங்கிய கலெக்டர்
|தேனியில் மாற்றுத்திறளாளிகளுக்கு கைத்தறி துண்டு கொடுத்து கலெக்டா் மனுக்கள் வாங்கினார்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், 8-வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி, சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சி அமைக்கப்பட்டது. இந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். பின்னர் முதல் விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்கள் கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் தரைத்தளத்தில் நாற்காலிகளில் அமர வைக்கப்பட்டு இருந்தனர்.
இதையடுத்து கலெக்டர் முரளிதரன் தனது சொந்த பணத்தில், மனு கொடுக்க வந்த 11 மாற்றுத்திறனாளிகளுக்கு கைத்தறி துண்டுகள் வாங்கி கொடுத்தார். பின்னர் அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொணடார். அந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில கைத்தறி துறையின் சார்பில் 4 நெசவாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 736 சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட தொகை பெறுவதற்கான உத்தரவு, ஒரு நெசவாளருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன், மதுரை சரக கைத்தறித்துறை உதவி இயக்குனர் வெங்கடேசலு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.