தேனி
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக தற்காலிக வட்டார போக்குவரத்து சோதனை சாவடி திறப்பு
|சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக உப்பார்பட்டி விலக்கு அருகே தற்காலிக வட்டார போக்குவரத்து சோதனை சாவடி திறக்கப்பட்டது.
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேனி வழியாக சபரிமலைக்கு சென்று வருகின்றனர். கேரள மாநிலத்துக்கு செல்ல வேண்டியதால் வாகனங்களுக்கு தற்காலிக அனுமதிச்சீட்டு பெறுவதற்கு தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சோதனை சாவடி அமைந்துள்ளது.
அந்த இடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததாலும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டு வந்தது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து வீரபாண்டி பகுதியில் கடந்த ஆண்டுகளில் சபரிமலை சீசன் காலங்களில் அமைக்கப்பட்டது போன்று தற்காலிக சோதனை சாவடி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து தற்காலிக சோதனை சாவடி அமைக்க கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். அதன்பேரில், தேனி-கம்பம் சாலையில் உப்பார்பட்டி விலக்கு அருகே அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது.
இந்த தற்காலிக சோதனை சாவடியை வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வக்குமார் நேற்று ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சபரிமலை மற்றும் குமுளி மலைப்பாதை, கம்பம் மெட்டு மலைப்பாதை வழியாக கேரள மாநிலத்துக்கு செல்லும் வாகனங்களுக்கு இந்த தற்காலிக சோதனை சாவடியில் அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. பழனிசெட்டிபட்டியில் உள்ள சோதனை சாவடியில் மூணாறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்படும்" என்றார்.