தேனி
அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக வீரபாண்டியில் தற்காலிக சோதனை சாவடி: பா.ஜ.க.வினர் கோரிக்கை
|அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக வீரபாண்டியில் தற்காலிக சோதனை சாவடி அமைக்க வேண்டும் என பா.ஜ.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி தலைமையில் நிர்வாகிகள் சிலர் வந்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், "சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் தேனி வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் செல்கிறார்கள்.
அவர்கள் செல்லும் வாகனங்களுக்கு தற்காலிக அனுமதிச்சீட்டு வழங்கும் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி பழனிசெட்டிபட்டியில் உள்ளது. அங்கு விபத்து அபாயம் உள்ளதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, வீரபாண்டியில் தற்காலிகமாக வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடி அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்கும். வாகன நெரிசலும் ஏற்படாது" என்று கூறியிருந்தனர்.