சிவகங்கை
1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை கண்காணிக்க குழு
|1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை கண்காணிக்க குழு என்று மாவட்ட கலெக்டர் கூறினார்.
1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை கண்காணிக்க குழு என்று மாவட்ட கலெக்டர் கூறினார்.
பயிற்சி கூட்டம்
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான, முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்திடும் நோக்கில் ஊராட்சி அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினா்களுக்கு வட்டார அளவிலான பயிற்சி கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. பயிற்சியை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:-
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை தற்போது விரிவுபடுத்தி சிவகங்கை, தேவகோட்டை மற்றும் மானாமதுரை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை தவிர்த்து அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் ஜூன் மாதத்தில் தொடங்கப்பட உள்ளது.
உணவு
இந்த திட்டத்தினை சிறப்பாக அனைத்துப்பகுதிகளிலும் செயல்படுத்திடும் பொருட்டு அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், ஒரு குழுவை நியமித்து அதில் ஊராட்சி மன்றத்தலைவர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மைக்குழு, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பஞ்சாயத்து கூட்டமைப்பு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர்களை ஒன்றிணைத்து செயல்பட அரசால் அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், ஊராட்சி அளவிலான கண்காணிப்புக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கான வட்டார அளவிலான பயிற்சி அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் சமையல்கூடம் புதுப்பித்தல், புதிதாக கட்டுதல் போன்ற கோரிக்கைகள் இருப்பின், அதனை சம்பந்தப்பட்ட பள்ளிகள் வாயிலாகவோ, ஊராட்சிகளின் வாயிலாகவோ தெரிவிக்கலாம். அக்கோரிக்கைகள் மீது தனிகவனம் செலுத்தி உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, அந்தந்தப் பள்ளிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் வாயிலாக நியமிக்கப்படவுள்ள சமையலா்கள் குறிப்பிட்ட நேரத்தில் சமையல் வேலைகளை முடித்து, மாணவர்களுக்கு உணவு வழங்க வேண்டும்.
முழு ஈடுபாடு
மாவட்ட அளவில் இப்பணிகளை கண்காணிக்க அலுவலா்கள் குழு அனைத்துப் பகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனா். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டு, அத்திட்டத்தினை விரிவுபடுத்திடும் நோக்கில், நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை முழு ஈடுபாடுடன், தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, இத்திட்டத்தின் பயன்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
இந்நிகழ்ச்சியில், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவா் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளா்(சத்துணவு) சாந்தி, உதவி திட்ட அலுவலா்கள் .அன்புராஜா, குபேந்திரன், சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலா்கள் சந்திரா (வ.ஊ.) ரத்தினவேல் (கி.ஊ.) மற்றும் ஊராட்சி மன்றத்தலைவா்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.