தேனி
பள்ளி கட்டிட பணிக்காகதோண்டப்பட்ட குழிகளால் விபத்து அபாயம்
|கம்பத்தில் பள்ளி கட்டிட பணிக்காக தோண்டப்பட்ட குழிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கம்பம் ஊராட்சி ஒன்றியம் குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே பள்ளி வளாகத்தில் ரூ.12 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், ரூ.5 லட்சம் மதிப்பில் மாணவர் கழிப்பறை கட்ட ஊராட்சி ஒன்றியம் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த கோடை விடுமுறையின் போது கட்டுமான பணிகள் நடைபெற்றது. இந்த கட்டுமான பணிக்காக 10 அடி ஆழத்திற்கு குழிகள் தோண்டப்பட்டு, இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டு பணிகள் நிறைவடையாமல் அரைகுறையாக உள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளி திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் விளையாடும் சூழல் நிலவுகிறது. அப்போது கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தும், கம்பிகள் குத்தி காயம் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்-ஆசிரியர் சஙகத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.