ஈரோடு
திருடிய நகைகளை கோவிலில் வைக்காததால் சேவலை சூலாயுதத்தில் குத்தி பரிகாரம்
|திருடிய நகைகளை கோவிலில் வைக்காததால் சேவலை சூலாயுதத்தில் குத்தி பரிகாரம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடத்தூர்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் ராமசாமி. கடந்த 15-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டின் மாடிப்படி அருகே உள்ள மறைவான இடத்தில் வைத்துவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். மறுநாள் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது மாடிப்படி அருகே மறைவான இடத்தில் வைக்கப்பட்ட சாவியை காணவில்லை. மேலும் அந்த சாவி அவருடைய வீட்டின் அருகே இருந்த மற்றொரு வீட்டின் மாடியில் கிடந்தது. உடனே சாவியை எடுத்து திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரத்தை காணவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனிடையே ராமசாமி குடும்பத்தினர், வீட்டின் முன்பு ஒரு எச்சரிக்கை பேனர் வைத்தனர். அந்த பேனரில், 'நகை பணத்தை திருடியவர்கள் யாராக இருந்தாலும், வெள்ளாங்கோவிலில் உள்ள மாகாளியம்மன் கோவில் முன்பு வைத்துவிட வேண்டும். அவ்வாறு வைக்காவிட்டால் 24-ந் தேதி கோவிலின் முன்பு உள்ள சூலாயுதத்தில் கோழி குத்தி பரிகாரம் செய்யப்படும். அவ்வாறு கோழி குத்திவிட்டால் நகை திருடியவர்கள் குடும்பம் கடும் பாதிப்புக்கு உள்ளாகும்,' என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நகையை எடுத்தவர்கள் அதை கோவில் முன்பு வைக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று வெள்ளாங்கோவில் மாகாளியம்மன் கோவிலில் உள்ள சூலாயுதத்தின் மீது ராமசாமி குடும்பத்தினர் சேவலை குத்திவிட்டு சென்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.