ஈரோடு
வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்;ஈரோடு மாவட்ட ஜெயின் சங்க தலைவர் பிரகாஷ் பேட்டி
|வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என்று ஈரோடு மாவட்ட ஜெயின் சங்க தலைவர் பிரகாஷ் ஜெயின் கூறினார்.
வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என்று ஈரோடு மாவட்ட ஜெயின் சங்க தலைவர் பிரகாஷ் ஜெயின் கூறினார்.
பிரச்சினை இல்லை
ஈரோட்டில் வாழும் ஜெயின் சமூகத்தின் சார்பாக ஜெயின் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ் ஜெயின் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஒரு வாரமாக வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈரோடு, திருப்பூர், கோவை, சென்னையில் தாக்கப்படுவது போல் வீடியோ தொடர்ந்து பரவி வந்தது.
இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறவில்லை.
இதுகுறித்து, தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினும், காவல் துறை தலைவர் சைலேந்திர பாபுவும் விளக்கம் அளித்து உள்ளனர். அந்த வீடியோ உண்மை இல்லை எனவும், போலியானது எனவும் தெரிவித்து உள்ளனர். தமிழர்களுக்கும் -பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் இங்கு எந்த பிரச்சினையும் இல்லை.
பாதுகாப்பான மாநிலம்
மராட்டியம், அசாம் போன்ற மாநிலங்களில் பீகார் மாநிலத்தவர்களிடம் நிறைய பிரச்சினைகள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் அதுபோன்ற பிரச்சினைகள் இல்லை.
நான் ஈரோட்டில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இந்தியாவிலேயே வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பான மாநிலம் எதுவென்றால் அது தமிழ்நாடு தான். இங்கு யார் வந்தாலும், எந்தவித பிரச்சினையும் இல்லை.
தமிழ்நாடு அரசியலில் தி.மு.க., அ.தி.மு.க. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வடமாநிலத்தவர்கள் பாதுகாப்பாகத்தான் உள்ளார்கள். ஈரோட்டில் ஜெயின் சமூக மக்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு இதுபோன்ற பிரச்சினை எப்போதும் வந்ததில்லை. தமிழக மக்கள் மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்பவர்கள். அவர்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள்.
இவ்வாறு பிரகாஷ் ஜெயின் கூறினார்.